ராஜினாமா கடிதத்தை கிழித்து எறிந்த ஆதரவாளர்கள்! ஆளுநரை சந்திக்க சென்றார் மணிப்பூர் முதலமைச்சர்!
மக்கள் போராட்டத்தை அடுத்து ராஜினாமா முடிவை பிரேன் சிங் கைவிட்டதாகவும் தகவல்.
மணிப்பூரில் கடந்த 2 மாதங்களுக்கு மேலாக வன்முறை நீடித்து வருகிறது. இந்த வன்முறையில் பலர் உயிரிழந்தனர். ஆயிரக்கணக்கானோர் தங்களது உடமைகளை இழந்து தவித்து வருகின்றனர். மணிப்பூரில் கலவரத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் பாதுகாப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மணிப்பூர் வன்முறையை தொடர்ந்து, அம்மாநில முதலமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும் என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த சமயத்தில் தொடர் வன்முறை சம்பவங்களை அடுத்து, மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங் ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது. இன்று மணிப்பூர் ஆளுநர் அனுசியாவை சந்தித்து, தனது ராஜினாமா கடிதத்தை பிரேன் சிங் வழங்க உள்ளதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில், மணிப்பூரில் அசாதாரண சூழலுக்கு மத்தியில், அம்மாநில ஆளுநரை சந்திக்க சென்றுள்ளார் முதலமைச்சர் பிரேன் சிங்.
மணிப்பூர் வன்முறை தொடர்பாக அம்மாநில முதலமைச்சர் பிரேன் சிங் ராஜினாமா செய்யப் போவதாக தகவல் பரவி வரும் நிலையில், இன்னும் சற்று நேரத்தில் அம்மாநில ஆளுநர் அனுஷ்யாவை சந்தித்து பேசயிருக்கிறார். இதனிடையே, மணிப்பூர் முதலமைச்சர் பதவியில் இருந்து பிரேன் சிங் ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல் வெளியான நிலையில், அவரது ஆதரவாளர்கள் வீட்டுக்கு வெளியே திரண்டு, ராஜினாமா முடிவுக்கு எதிராக குரல் எழுப்பி வருகின்றனர்.
பிரேன் சிங், அவரது முடிவை மாற்ற வலியுறுத்தி நூற்றுக்கணக்கான பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். அதுமட்டுமில்லாமல் ஆளுநரிடம் அளிக்க இருந்த ராஜினாமா கடிதத்தை அவரது ஆதரவாளர்கள் கிழித்து எறிந்து ஆதரவு தெரிவித்துள்ளனர். இருப்பினும், போக்குவரத்து நெரிசலுக்கு மத்தியில் கூட்டத்தை கடந்து ஆளுநரை சந்திக்க மணிப்பூர் முதலமைச்சர் பிரேன் சிங் சென்றுள்ளார்.
மேலும், மக்கள் போராட்டத்தை அடுத்து தனது ராஜினாமா முடிவை மணிப்பூர் முதலமைச்சர் பிரேன் சிங் கைவிட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. எனவே, மணிப்பூர் முதலமைச்சர் பிரேன் சிங் தனது பதவியை ராஜினாமா செய்வாரா? அல்லது மக்கள் போராட்டத்தை கருத்தில் கொண்டு கைவிடுவாரா என்பது குறித்து சற்று நேரத்தில் தெரிந்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.