#Breaking:மகாராஷ்டிரா அரசுக்கு அளித்த ஆதரவு வாபஸ் – அதிருப்தி எம்எல்ஏக்கள் அறிவிப்பு!
மகாராஷ்டிரா மாநிலத்தில் காங்கிரஸ்,தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் சிவசேனா கட்சி தலைமையிலான அரசின் ஆட்சி நடைபெற்று வருகிறது.இந்த வேளையில்,மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக அமைச்சர் ஏக்நாத் சிண்டே உள்ளிட்ட 35-க்கும் மேற்பட்ட சிவசேனா எம்எல்ஏக்கள் முன்னதாக குஜராத்தில் உள்ள ஒரு ஹோட்டலில் முகாமிட்டு போர்க்கொடி தூக்கிய நிலையில்,தற்போது அசாம் மாநிலத்தில் முகாமிட்டு சிவசேனா அரசுக்கு எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.
இதனால்,ஏக்நாத் சிண்டே உள்ளிட்ட 16 மகாராஷ்டிரா சட்டமன்ற உறுப்பினர்களுக்கு தகுதி நீக்க நோட்டீஸ் அனுப்பப்பட்டது.அதன்படி, அவர்கள் இன்று மாலைக்குள் இந்த விவகாரம் தொடர்பாக எழுத்துப் பூர்வமாக பதில் அளிக்க வேண்டும்.அந்த பதிலில் தனக்கு திருப்தி இல்லையெனில் கட்டாயம் தகுதி நீக்கம் செய்யப்படுவார்கள் என்று அம்மாநில சபாநாயகர் தெரிவித்திருந்தார்.இதனை எதிர்த்து,அதிருப்தி எம்எல்ஏக்கள் உச்சநீதிமன்றத்தை நாடியுள்ளனர்.இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வரவுள்ளது.
இந்நிலையில்,மகாராஷ்டிராவில் சிவசேனா தலைமையிலான கூட்டணி அரசுக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெறுவதாக அதிருப்தி எம்எல்ஏக்கள் அறிவித்துள்ளனர்.அதன்படி,தனது தலைமையிலான 38 எம்எல்ஏக்கள் சிவசேனா கூட்டணி அரசுக்கு அளித்த ஆதரவை வாபஸ் பெறுவதாக ஏக்நாத் சிண்டே உச்சநீதிமன்றத்தில் தகவல் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.இதனால்,சிவசேனா கூட்டணி அரசு பெரும்பான்மையை இழந்துள்ளது.இதனைத் தொடர்ந்து,அடுத்த கட்ட நிலவரம் குறித்த தகவல்கள் பின்னர் தெரிய வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே,முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான அரசை கவிழ்த்து,தங்களது ஆட்சியை அமைக்க பாஜக தீவிரம் காட்டி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.