திடீர் திருப்பம்.. யாரும் எதிர்பார்க்காத புது ரூட்டை எடுக்கிராறா பிரசாந்த கிஷோர்? சூடும்பிடிக்கும் அரசியல் களம்..
மக்களை நேரில் அணுகப்போவதாக தான் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் பிரசாந்த் கிஷோர் சூசகம்.
2014 நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் பாஜக முதல் 2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் திமுக வரை பல கட்சிகளுக்கு தேர்தல் வியூக வகுப்பாளராக பிரசாந்த் கிஷோரின் வியூகம் அரசியல் களத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. பீகார் மாநிலத்தை பூர்விகமாக கொண்ட பிரசாந்த் கிஷோர், ஐக்கிய நாடுகள் சபையில் பொது சுகாதார ஆய்வாளராக 8 ஆண்டுகள் பணியாற்றியர். தற்போது, தேர்தல் வியூகம் வகுக்க பல்வேறு கட்சிகளும் தற்போது அவரை நாடி வருகின்றன.
பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளத்தில் இணைந்த பிரசாந்த் கிஷோர், அக்கட்சியின் துணைத் தலைவராக 2 ஆண்டுகள் பணியாற்றினார். பின்னர் இருவருக்கும் மோதல் ஏற்பட்டதால் கட்சியிலிருந்து விலகினார். அதன்பிறகு IPAC நிறுவனம் மூலம் தேர்தல் வியூக வகுப்பு பணிகளில் கவனம் செலுத்தி வந்தார். கடந்த 2012-ஆம் ஆண்டு குஜராத் சட்டமன்ற தேர்தலில் மோடி வெற்றி பெறமாட்டார் என்று கூறியபோது, தனது தேர்தல் வியூகங்களால் மோடியை வெற்றியடையச் செய்தார்.
இதன்தொடர்ச்சியாக 2014-ல் நாடாளுமன்றத் தேர்தலில் பல்வேறு வியூகங்கள் வகுத்துக் கொடுத்து பாஜகவிற்கு வெற்றியை பெற்றுத் தந்தார். ஆனால், 2015-ல் பாஜகவுடனான நட்பில் பின்னடைவு ஏற்பட்டது. இதனால் பல்வேறு அரசியல் கட்சிகளுக்கும் தேர்தல் வியூகங்களை வகுத்துக் கொடுக்க ஆரம்பித்தார். அதன்படி, 2016-ல் பஞ்சாபில் காங்கிரஸ் ஆட்சி அமைய வியூகம் வகுத்தார். 2019-ல் ஆந்திராவில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி ஆட்சியைப் பிடிக்கவும் வழிவகுத்தார்.
பின்னர் 2017-ல் உத்தரப் பிரதேச தேர்தலில் காங்கிரஸுக்காகப் பணியாற்றினார். ஆனால், அந்தத் தேர்தலில் பாஜக பிரமாண்ட வெற்றி பெற்றது, பிரசாந்த் கிஷோரின் முதல் சரிவாகும். பின்னர் 2021-ல் நடந்த ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழகத்தில் திமுக, மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸ் கட்சிகளுக்காக வியூகங்களை வகுத்து கொடுத்து மீண்டும் ஆட்சியை பிடிக்க வழிவகுத்தார்.
இதையடுத்து, சமீபத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்தித்து, கட்சியை மறுசீரமைப்பு செய்வது தொடர்பான தனது பரிந்துரைகளை அளித்திருந்ததாகவும், காங்கிரஸ் கட்சியில் சேர பிரசாந்த் கிஷோருக்கு அழைப்பு விடுத்த நிலையில், அதனை அவர் மறுத்துவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கு அனைத்துக் கட்சிகளுமே ஆயத்தமாகி வரும் சூழலில், பிரசாந்த் கிஷோரின் பங்களிப்பு விவாதப் பொருளாகியுள்ளது.
இந்த நிலையில், அரசியல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் புதிய அரசியல் கட்சி தொடங்குகிறாரா என்ற எதிர்பார்ப்பு தற்போது எகிறியுள்ளது. ஏனெனில், பிரசாந்த் கிஷோர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், ஜனநாயகத்தில் அர்த்தமுள்ள பங்கேற்பாளராக இருப்பதற்கும், மக்கள் சார்பான கொள்கையை வடிவமைக்க உதவுவதற்கும் எனது ஆலோசனையானது 10 ஆண்டுகள் ரோலர்கோஸ்டர் சவாரிக்கு (பிரதமர் மோடி தலைமையிலான அரசு) வழிவகுத்துள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
எனவே, மக்கள் நல்லாட்சிக்கான பாதைக்கு செல்ல வேண்டிய நேரம் இது. மக்களிடம் நேரடியாக செல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டது. நல்லாட்சி என்ற முழக்கத்துடன் மக்களை சந்திக்க உள்ளேன் என சூசகமாக தெரிவித்துள்ளார். இதனால், பீகார் மாநிலத்தை மையமாக வைத்து பிரசாந்த் கிஷோர் அரசியல் கட்சி தொடங்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரசாந்த் கிஷோரின் சூசக பதிவு அரசியல் களத்தில் தாக்கத்தை ஏற்படுத்துமா என பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
My quest to be a meaningful participant in democracy & help shape pro-people policy led to a 10yr rollercoaster ride!
As I turn the page, time to go to the Real Masters, THE PEOPLE,to better understand the issues & the path to “जन सुराज”-Peoples Good Governance
शुरुआत #बिहार से
— Prashant Kishor (@PrashantKishor) May 2, 2022