இந்திய வடகிழக்கு மாநிலங்களில் அடுத்தடுத்த நிலநடுக்கம்..! அச்சத்தில் மக்கள்..!
இன்று இந்திய வடகிழக்கு மாநிலங்களில் அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால் அங்கு வசிக்கும் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
இன்று அதிகாலை 1.06 மணிக்கு மணிப்பூர் மொய்ராங் பகுதியில் 3.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அசாமின் தேஜ்பூர் பகுதியில் 4.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது அதிகாலை 2.04 மணிக்கு நிகழ்ந்துள்ளது. பின்னர் அதிகாலை 4.20 மணியளவில் மேகாலயாவின் மேற்கு காஜி பகுதியில் 2.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவானதாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மதியம் 12.42 மணியளவில் மீண்டும் அசாமில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது அங்கிருக்கும் சோனித்பூர் நகரத்தில் நடந்துள்ளது. மேலும், இது ரிக்டர் அளவில் 2.8 ஆக பதிவாகியுள்ளதாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.