மோடி தோற்க வேண்டும்.? மீண்டும் மீண்டும் வலியுறுத்தும் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி.!
PM Modi : பிரதமர் மோடி அவரது வாரணாசி தொகுதியில் தோற்கடிக்கப்பட்டால் என்னவாகும் என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி பதிவிட்டுள்ளார்.
பாஜகவில் இருந்தாலும் பாஜக தலைவர்களுக்கு எதிராக தனது விமர்சனங்களை முன்வைக்க தவறியதில்லை பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி. பல்வேறு சமயங்களில் இவரது சர்ச்சையான கருத்துக்கள் தேசிய அளவில் பேசுபொருளாக மாறிவிடுகிறது. அதனாலோ என்னவோ, தேர்தல் நேரங்களில் இவரை பிரச்சாரம் செய்ய பாஜக தலைமை அழைப்பதில்லை.
வாரணாசி பயணம் :
பிரதமர் நரேந்திர மோடி, அவரது தொகுதியிலேயே தோற்கடிக்கப்பட வேண்டும் என்பது போல கருத்து தெரிவித்து மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார் சுப்பிரமணியன் சுவாமி. அண்மையில், சுப்பிரமணியன் சுவாமி பிரதமர் மோடியின் சொந்த தொகுதியான வாராணாசிக்கு ஆன்மீக பயணமாக வந்து இருந்தார்.
மோடி தோற்கடிக்கப்பட்டால்…
வாரணாசி பயணத்தை அடுத்து தனது எக்ஸ் சமூக வலைதளத்தில் ஓர் பதிவை இட்டு இருந்தார். அதில், வாரணாசி வாக்காளர்கள் மோடியை தோற்கடித்தால், ஞானவாபி மசூதியினர், காசி விஸ்வநாதர் ஆலைய இடத்தை காலி செய்து, முஸ்லிம் தலைவர்கள் விருப்பப்படி தங்கள் மசூதியை வேறு இடத்தில் கட்டுவது எளிதாகிவிடும். இஸ்லாமியர்களின் புனித நூலான குரான் படி வேறு இடத்தில் மசூதி கட்டலாம். மேலும், ராமர் கோவில் நில வழக்கில் நீதிமன்றத்தின் மூலம் மற்றொரு இடத்தில் மசூதி கட்ட முஸ்லிம் தரப்பு ஒப்புக்கொண்டுள்ளனர் என்று தெரிவித்த சுப்பிரமணியன் சுவாமி, 10 ஆண்டுகளாக பிரதமர் மோடி ஒன்றும் செய்யவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
பாஜக வெற்றி – மோடி தோல்வி :
பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக சுப்ரமணியன் சுவாமி கருத்து தெரிவிப்பது இது முதல் முறையல்ல. ஏற்கனவே, கடந்த மாதம் மதுரைக்கு, பாஜக பிரமுகரின் திருமண விழாவுக்கு வந்த சுப்பிரமணியன் சுவாமி, 2024 தேர்தலில் பாஜக பெரும்பான்மையுடன் வெற்றி பெறும். ஆனால் பிரதமர் மோடி அவர் சொந்த தொகுதியில் தோற்கடிக்கப்பட வேண்டும் என்றும், அவரை பிரதமர் வேட்பாளராக பாஜக இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை என்றும் கூறி அதிர வைத்தார் சுப்பிரமணியன் சுவாமி.
ஒன்றும் செய்யாத மோடி :
யார் வேண்டுமானாலும் , வேட்பாளர்களை நிறுத்தலாம். ஆனால் கட்சி வலுவாக இருக்கிறதா என்பதை பார்க்க வேண்டும். பணத்தை வைத்து விளம்பரம் செய்தால் மட்டும் போதாது. மக்கள் நம்ப வேண்டும். சீனா, இந்தியாவின் 4000 கிமீ பகுதியை ஆக்கிரமித்து உள்ளது. அதனை பிரதமர் மோடி தடுக்கவில்லை. பொருளாதார ரீதியாக நமது நாடு பின்தங்கி உள்ளது. அதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை. மாலத்தீவுடன் பிரச்சினை உள்ளது அதற்கு மோடி ஒன்றும் செய்யவில்லை. இதன் காரணமாகவே மோடி தோற்கடிக்கப்பட வேண்டும் என பேசி தேர்தலுக்கு முன்பே அரசியல் களத்தை அதிர வைத்தவர் பாஜக மூத்த தலைவர் சுப்ரமணிய சுவாமி.