தமிழக மக்கள் மீது மாற்றுமொழி திணிக்கப்படுகிறது : ராகுல் காந்தி.!
காங்கிரஸ் கட்சியின் 84 வது தேசிய அளவிலான 2 நாள் மாநாடு டெல்லியில் நேற்று தொடங்கியது. காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்ட மூத்த தலைவர்கள், காங்கிரஸ் ஆளும் மாநில முதலமைச்சர்கள், கட்சியின் மாநிலத் தலைவர்கள் உட்பட 15000 மேற்பட்டோர் இதில் கலந்து கொண்டுள்ளனர்.
மாநாட்டின் இன்றைய நிகழ்வில் பேசிய அக்கட்சியின் தலைவர் ராகுல் ஆளும் பாஜக அரசினை மிக கடுமையாக விமர்சனம் செய்தார், “வங்கிகளில் மக்கள் பணத்தை கொள்ளையடிப்போரை பாஜக அரசு காப்பாற்றுகிறது. பணக்காரர்களின் காப்பாளராக செயல்படுகிறது” என விமர்சனங்களை பாஜக மீது வைத்தார்.
மேலும், “தேசத்திற்காக குரல் கொடுக்கும் கட்சி காங்கிரஸ்தான்; பாஜக ஒரு அமைப்புக்காக குரல் கொடுக்கிறது. ஒவ்வொரு மாநிலத்தின் வளர்ச்சியிலும் காங்கிரஸ் கட்சியின் பங்கு உள்ளது.” என காங்கிரஸ் செயற்பாடுகள் குறித்து பேசிய அவர், “தமிழக மக்கள் மீது மாற்றுமொழி திணிக்கப்படுகிறது; அழகிய தமிழ் மொழியில் இருந்து மாறுமாறு தமிழக மக்கள் வற்புறுத்தப்படுகிறார்கள்” என இந்தி – சமஸ்கிருத திணிப்பு குறித்தும் விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.