“அமித்ஷாவை கண்டா வரச் சொல்லுங்க!கையோட கூட்டி வாருங்க”- காங்கிரஸ் கட்சி மாணவரணி புகார்!!!
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை காணவில்லை என்று டெல்லி காவல்துறையினரிடம்,காங்கிரஸ் கட்சியின் மாணவரணியினர் புகார் அளித்துள்ளனர்.
காங்கிரஸ் கட்சியின் மாணவரணி அமைப்பான,இந்திய தேசிய மாணவர் சங்கத்தின்(என்.எஸ்.யு.ஐ) பொதுச் செயலாளர் நாகேஷ் காரியப்பா, உள்துறை அமைச்சர் அமித்ஷாவை காணவில்லை என்று டெல்லி பாராளுமன்ற தெரு காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்றை கொடுத்துள்ளார்.
இதுகுறித்து,நாகேஷ் காரியப்பா அளித்த புகாரில்,”நாடு முழுவதும் அதிக அளவிலான மக்கள் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டும், உயிரிழந்தும் வருகின்றனர்.இந்நிலையில்,நாட்டின் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை காணவில்லை.எனவே,அவரை கண்டுபிடித்து தர வேண்டும்” என்று தெரிவித்திருந்தார்.
இதனையடுத்து,இந்திய தேசிய மாணவர் சங்க அலுவலகத்துக்கு டெல்லி காவல்துறையினர் நேரில் சென்று புகார் அளித்தவரிடம் விசாரணை மேற்கொண்டார்கள்.
இதனைத்தொடர்ந்து,டெல்லி காவல்துறையினர் நடத்திய விசாரணையில் நாகேஷ் காரியப்பா கூறியதாவது,”நாடு முழுவதும் உள்ள மக்கள் கொரோனா வைரஸ் என்ற கொடிய தொற்று நோயால் பாதிக்கப்பட்டு கொண்டிருக்கும் இந்த சூழலில்,இதற்கு பொறுப்பு கொரோனா பரவலை கட்டுப்படுத்த நடவடிக்கைகள் எடுக்க வேண்டியது அரசியல் தலைவர்களின் கடமையாகும்.எனவே,அரசியல் தலைவர்கள் நாட்டிற்கு சேவை செய்ய வேண்டுமே தவிர நெருக்கடி சூழ்நிலைகளிலிருந்து ஓடி விடக்கூடாது.
ஆனால்,இந்த கொரோனா வைரஸின் இரண்டாவது அலைக்கு மத்தியில், நாட்டின் முக்கிய பொறுப்பில் இருக்கும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை நீண்ட நாட்களாக காணவில்லை.எனவே,அமித்ஷா இப்போது நாட்டின் உள்துறை அமைச்சரா?,இல்லை பா.ஜ.க கட்சியின் உறுப்பினர் மட்டுமா? என்று தெரியவில்லை.அதனால்,எங்களின் புகார் தொடர்பாக மத்திய அரசின் பதில்களை எதிர்பார்த்து காத்திருக்கிறோம்”, என்று கூறினார்.