மாணவர்கள் தொடர் தற்கொலை..! கோட்டா மாவட்ட நிர்வாகம் பயிற்சி நிறுவனங்களுக்கு அதிரடி உத்தரவு…!
ராஜஸ்தானின் கோட்டாவில் நேற்று நீட் தேர்வெழுதிய சில மணி நேரங்களிலேயே இரண்டு மாணவர்கள் அடுத்தடுத்து தற்கொலை செய்துகொண்டனர். இந்த ஆண்டு மட்டும் கோட்டாவில் 24 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக கூறப்படுகிறது.
உயிரிழந்த மாணவர்களின் அவிஷ்கர் ஷம்பாஜி கஸ்லே மற்றும் ஆதர்ஷ் ராஜ் என அடையாளம் காணப்பட்டனர். விவரங்களின்படி, அவிஷ்கர் ஒரு தேர்வு எழுதிய சில நிமிடங்களில், கிட்டத்தட்ட 3.15 மணியளவில் நீட் பயிற்சி மையத்தின் ஆறாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துள்ளார்.
உடனே, நீட் பயிற்சி மையத்தின் ஊழியர்கள் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். இந்த தற்கொலை சம்பவம் அந்த வளாகத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
பின்னர், பீகாரைச் சேர்ந்த ஆதர்ஷ் ராஜ் இரவு 7 மணியளவில் தனது வாடகை குடியிருப்பில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தேர்வில் குறைந்த மதிப்பெண்கள் வந்துவிடுமோ என அஞ்சி இந்த விபரீத முடிவுகளை எடுத்தாக கூறப்படுகிறது.
2 மாணவர்களின் அடுத்தடுத்த தற்கொலையை தொடர்ந்து, தொடர் தற்கொலைகளால் பயிற்சி நிறுவனங்கள் 2 மாதங்களுக்கு எந்த தேர்வுகளும் நடத்தக் கூடாது, மனநல ஆலோசனை வகுப்புகள் நடத்த வேண்டும் என கோட்டா மாவட்ட நிர்வாகம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.