புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு கடும் கட்டுப்பாடு விதிப்பு.!
புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது புதுச்சேரி கடற்கரையில் நெரிசலை தடுக்க, ஒயிட் டவுன் வழியாக கடற்கரைக்கு வாகனங்கள் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் இன்று இரவு கடற்கரை சாலையில் நடைபெற உள்ள புத்தாண்டு கொண்டாட்டங்களை முன்னிட்டு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிந்துள்ளனர். இந்நிலையில், கூட்ட நெரிசலை தவிர்க்க, இன்று மதியம் 2:00 மணி முதல் 1ம் தேதி காலை 9:00 மணி வரை ஒயிட் டவுன் பகுதிக்குள் உள்ளே வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
புத்தாண்டை முன்னிட்டு, பாதுகாப்பு குறித்து, காவல் துறை தலைவர் திரு அஜித்குமார் சிங்லா தலைமையில் நேற்று ஆலோசனைக்கூட்டம் நடைப்பெற்றது. இதில், புத்தாண்டை முன்னிட்டு பாதுகாப்பு பணிகள் குறித்த சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.
முக்கிய இடங்களில் 2,000க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடவுள்ளனர். கடற்கரை சாலையில் கலை நிகழ்ச்சி, இசை, நடன நிகழ்ச்சிக்கும் அனுமதியில்லை. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவு காரணமாக துக்கம் அனுசரிக்கப்படுவதால் வழக்கமான கொண்டாட்டம் கிடையாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, இன்று மதியம் முதல் ஒயிட் டவுன் பகுதியில் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது. கடற்கரை நோக்கி செல்லும் அனைத்து சாலைகளும் தற்காலிகமாக மூடப்படுகிறது. பொதுமக்கள் வசதிக்காக 10 இடங்களில் தற்காலிக பார்க்கிங் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.