பெண்களிடம் வரதட்சணை கேட்டு துன்புறுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் – கேரளா முதல்வர்!
வரதட்சணை கேட்டு பெண்களை துன்புறுத்தினால் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கேரளா முதல்வர் பினராயி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கேரளாவில் கடந்த சில மாதங்களாக பெண்கள் சிலர் வரதட்சணை கொடுமையால் உயிரிழந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. இதனையடுத்து வரதட்சணைக்கு எதிராக கேரளாவில் அம்மாநில ஆளுநர் சமீபத்தில் உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டிருந்த நிலையில், தற்போது இது குறித்து சட்டப்பேரவையில் பேசிய கேரள முதல்வர் பினராயி விஜயன் அவர்கள், கேரளாவில் வரதட்சணை கேட்டு பெண்களைத் துன்புறுத்துவது தொடர்பான வழக்குகள் தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும், காந்திய வழியில் விழிப்புணர்வு மேற்கொள்ளும் வகையில் கேரளா ஆளுநர் உண்ணாவிரதம் மேற்கொண்டதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது போன்று சமூக விழிப்புணர்வு மேற்கொண்டால் தான் வரதட்சணை கொடுமையை தடுக்க முடியும் எனவும், கடந்த 2011 முதல் 2016 வரையிலான காலகட்டத்தில் வரதட்சணை தொடர்பான வழக்குகளில் கேரளாவில் 100 உயிரிழப்பு சம்பவங்கள் நிகழ்ந்ததாகவும், 2016 முதல் 2021 வரை இந்த உயிரிழப்புகள் 54 ஆக குறைந்துள்ளதாகவும் கூறியுள்ளார். குறிப்பாக 2020 – 2021 காலகட்டத்தில் மட்டும் 6 பேர் உயிரிழந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் இனிமேல் கேரளாவில் வரதட்சணை கேட்டு பெண்களைத் துன்புறுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார் .