டானா புயல்: 200 ரயில்கள் ரத்து, விமானங்கள் மற்றும் கப்பல் சேவை நிறுத்தம்!
டாணா புயல் முன்னெச்சரிக்கை எதிரொலியாக 200க்கும் மேற்பட்ட ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒடிசா : வங்கக் கடலில் உருவான டானா புயல் ஒடிசா – மேற்குவங்கம் இடையே நாளை (25ம் தேதி) அதிகாலை கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், கரையை கடக்கும் பொழுது, காற்றின் வேகம் மணிக்கு 100-110 கிமீ வேகத்தில் 120 கிமீ வேகத்தில் வீசக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இதனால், இரு தினங்களுக்கு பல்வேறு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும் தயார் நிலையில் மீட்புப் படை நிலை நிறுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மேற்கு வங்கத்தில் 1.14 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் ஏற்கனவே தங்குமிடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
200 ரயில்கள் ரத்து
தென்கிழக்கு ரயில்வே (SER) வரம்பில் இயங்கும் 200-க்கும் மேற்பட்ட எக்ஸ்பிரஸ் மற்றும் பயணிகள் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும், மேற்கு வங்கத்தில் மின்சார ரயில்கள் இன்றிரவு 8 மணி முதல் நாளை காலை 10 மணி வரை இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
விமானங்கள் நிறுத்தம்
டானா புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கொல்கத்தாவில் உள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சர்வதேச விமான நிலையத்தில் இன்று மாலை 6 மணி முதல் 15 மணி நேரம் விமானப் போக்குவரத்து நிறுத்தப்படும். மேலும், அக்டோபர் 25 ஆம் தேதி மாலை 6 மணி முதல் அக்டோபர் 26 ஆம் தேதி காலை 9 மணி வரை விமான செயல்பாடுகள் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கப்பல் சேவை நிறுத்தம்
டானா புயல் காரணமாக நாகை – இலங்கை காங்கேசன்துறை இடையேயான பயணிகள் கப்பல் போக்குவரத்து இன்று ரத்து செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.