நாடாளுமன்றத்தை முடக்கும் உறுப்பினர்களின் ஊதியத்தை பிடித்தம் செய்க: பிஜேபி எம்.பி மனோஜ் திவாரி
நாடாளுமன்றத்தை முடக்கும் நாடாளுமன்ற உறுபினர்களின் ஊதியத்தை பிடித்தம் செய்யக் கோரி பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் மனோஜ் திவாரி, சபாநாயகர் சுமித்ரா மகாஜனுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
கடும் அமளி காரணமாக நாடாளுமன்றத்தின் மக்களவை மற்றும் மாநிலங்களவை ஆகிய இரு அவைகளிலும் தொடர்ந்து 13வது நாளாக இன்றும் முடங்கியுள்ளன. இதனால் எதிர்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானம், அரசு கொண்டுவரும் மசோதாக்கள் உட்பட பல மசோதாக்கள் நிறைவேற்றப்படாமல் கிடப்பில் உள்ளன.
இந்நிலையில் இது தொடர்பாக மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜனுக்கு, மகாராஷ்டிரா மாநில பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் மனோஜ் திவாரி எழுதியுள்ள கடிதத்தில், ”மக்கள் பிரதிநிதிகள் என்பதை மறந்து, தங்களின் பொறுப்புக்களை உணராமல், அவையை ஆக்கபூர்வமாக செயல்பட விடாமல் செய்யும் எம்.பிக்களுக்கு ஊதியம் தரக்கூடாது. வேலை செய்யாத எம்.பிக்களுக்கும் தண்டனையாக ஊதியத்தை பிடித்தம் செய்யவேண்டும். அப்போது தான் அவர்கள் தங்களை மக்கள் பிரதிநிதிகளாக உணர்ந்து, செயல்படுவார்கள். மாநில அரசியலை கருத்தில் கொண்டு, நாடாளுமன்ற அவைகளை கூட செயல்பட விடாமல் அவர்கள் தடுத்து வருகின்றனர். இதற்கு இதுவே சிறந்த வழி” என்று அவர் அக்கடிதத்தில் தெரிவித்துள்ளார்.