மாநிலங்களின் கையிருப்பில் 2.28 கோடி தடுப்பூசி உள்ளது – மத்திய சுகாதாரத்துறை!
மாநிலங்களின் கையிருப்பில் 2.28 கோடி கொரோனா தடுப்பூசி இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தாக்கம் தற்போது சில பகுதிகளில் குறைந்து இருந்தாலும், பல இடங்களில் தொடர்ந்து பரவிக் கொண்டே தான் இருக்கிறது. எனவே, கொரோனாவில் இருந்து பாதுகாப்பதற்காக மக்கள் தடுப்பூசி செலுத்தி கொள்வதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில், மாநிலங்களின் கையிருப்பில் 2.28 கோடி தடுப்பூசி உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு சார்பில் இதுவரை 45,73,30,110 தடுப்பூசிகள் இலவசமாக வழங்கப்பட்டுள்ளதாகவும், அதில் 43,80,46,844 தடுப்பூசிகளை மாநிலங்கள் உபயோகித்து உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் தற்பொழுது மாநிலங்களின் கையிருப்பில் 2,28,27,959 தடுப்பூசிகள் உள்ளதாக கூறப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் மத்திய அரசு தரப்பில் இருந்து கூடுதலாக 24,11,000 தடுப்பூசிகள் மாநில அரசுகளுக்கு கூடுதலாக அனுப்பப்பட்டுள்ளதாகவும், நாடு முழுவதும் மத்திய மற்றும் மாநில அரசு சார்பில் கொள்முதல் செய்யப்பட்ட தடுப்பூசிகளில் இதுவரை 44.19 கோடி தடுப்பூசிகள் மக்களுக்கு செலுத்தப்பட்டு உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.