எரிபொருள் விலையுயர்வுக்கு மாநில அரசுகளை குறை சொல்ல முடியாது – பிரதமரின் கருத்துக்கு மகாராஷ்டிரா முதல்வர் பதில்!
கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பாக அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி இன்று காணொளி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டார்.
அப்பொழுது பேசிய அவர், கடந்த நவம்பர் மாதம் மத்திய அரசு வாட் வரியை குறைத்தது போன்று தமிழகம், தெலுங்கானா,மேற்கு வங்கம், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்கள் எரிபொருள் மீதான வாட் வரியைக் குறைக்கவில்லை. இதன் காரணமாக தான் பெட்ரோல், டீசல் விலை அதிகரித்துள்ளது என்று பிரதமர் மோடி தெரிவித்திருந்தார்.
பாஜக அல்லாத கட்சிகள் ஆளும் மாநிலங்கள் எரிபொருளுக்கான வரியை குறைக்குமாறு பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே அவர்கள், எரிபொருள் விலை உயர்வுக்கு மாநில அரசு பொறுப்பேற்க முடியாது என தெரிவித்துள்ளார்.
மேலும், இது குறித்து பேசிய அவர், மும்பையில் ஒரு லிட்டர் டீசல் விலையில் மத்திய அரசுக்கு 24.38 ரூபாயாகவும், மாநிலத்துக்கு 22.37 ரூபாயாகவும், பெட்ரோல் விலை மத்திய வரியாக 31.58 ரூபாயாகவும், மாநில வாரியாக 32.55 ரூபாயாகவும் உள்ளது என தெரிவித்துள்ளார். எனவே பெட்ரோல், டீசல் விலை உயர்வு மாநில அரசால் தான் என்று கூறுவதில் உண்மையல்ல என தெரிவித்துள்ளார்.
மேலும், இந்தியாவிலேயே அதிகபட்சமாக 15% ஜிஎஸ்டியை மகாராஷ்டிரா தான் வசூலிக்கிறது. நேரடி வரி மற்றும் ஜிஎஸ்டி இரண்டையும் சேர்த்தாலும், நாட்டிலேயே அதிகபட்சமாக வரி வசூலிப்பதில் மகாராஷ்டிரா தான் முதல் இடத்தில் உள்ளது என்றும் மகாராஷ்டிரா முதல்வர் அலுவலகம் தெரிவித்துள்ளது.