மாநில பேரிடர் மீட்புப் படை : உத்தரகாண்ட் நிலச்சரிவில் சிக்கிய 200 பேர் மீட்பு!
உத்தரகாண்ட் மாநிலத்திலுள்ள தாமஸ் பகுதியில் நேற்று ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கிய 200-க்கும் மேற்பட்டோர் மாநில பேரிடர் மீட்பு படை குழுவினரால் மீட்கப்பட்டுள்ளனர்.
உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள சமோலி மாவட்டம் ரைனி கிராமம் அருகே உள்ள தாமஸ் எனும் பகுதியில் நேற்று நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த நிலச்சரிவில் நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் சிக்கியுள்ள நிலையில், இதுகுறித்து தகவலறிந்து மாநில மீட்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றுள்ளனர்.
அப்போது நிலச்சரிவில் சிக்கி இருந்த 200 பேரை மாநில பேரிடர் மீட்பு படையினர் மீட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில், மேலும் உத்தரகாண்டில் ஆகஸ்ட் 24 முதல் 28 வரை ஐந்து நாட்களுக்கு இடியுடன் கூடிய மழை மற்றும் மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதனையடுத்து அப்பகுதியில் உள்ள மக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.