தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து மூன்று ஒருநாள் மற்றும் மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஜிம்பாப்வே பங்கேற்க இருக்கிறது. இரு அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி வருகிற 30ம் தேதி நடக்கிறது. அக்டோபர் 14ம் தேதி, கடைசி டி20 போட்டியுடன் தொடர் முடிவடைகிறது. இந்த நிலையில் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளுக்கான தென் ஆப்பிரிக்கா அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் ஒருநாள் அணியில், இரண்டு ஆண்டுகளுக்குப் பின் டேல் ஸ்டெய்ன் இடம் பிடித்திருக்கிறார். தாஹிர் மீண்டும் அழைக்கப்பட்டுள்ளார். கிறிஸ்டைன் ஜோங்கர், தேசிய அணியில் அறிமுகமாக உள்ளார். 2019 உலக கோப்பையை கருத்தில் கொண்டு, இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்க, விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் குயின்டன் டி காக் மற்றும் டேவிட் மில்லர் ஒருநாள் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
இலங்கை தொடரில் இருந்து காயம் காரணமாக விலகிய பாப் டு பிளேஸிஸ், இரு தொடர்களுக்கான அணிகளிலும் இடம் பெற்றுள்ளார்.
தென் ஆப்பிரிக்கா ஒருநாள் அணி: பாப் டு பிளேஸிஸ் (கேப்டன்), ஹஷிம் ஆம்லா, டுமினி, ஹென்றிக்ஸ், இம்ரான் தாஹிர், ஜோங்கர், ஹெய்ன்ரிச் க்ளாஸென், கேஷவ் மகாராஜ், ஏதேன் மார்க்ரம், வினான் மல்டர், லுங்கிசனி ன்கிடி, ஆண்டிலே, ரபாடா, ஷம்சி, கயா ஸ்ன்டோ.