மீனவர்கள் பிரச்சனைக்கு இதுதான் தீர்வு! டெல்லியில் பேசிய இலங்கை அதிபர்!
இந்திய மீனவர்கள் இலங்கை கடற்கரை பகுதியில் சுருக்குமடி வலைகளை பயன்படுத்துவதால் கடல் வளங்கள் அழியும். இதனை தடுத்து நிறுத்த வேண்டும் என இலங்கை அதிபர் டெல்லியில் கூறியுள்ளார்.
டெல்லி : இலங்கை அதிபராக அண்மையில் பொறுப்பேற்றுள்ள அனுரகுமார திஸாநாயக்க, முதல் வெளிநாட்டு பயணமாக நேற்று இந்தியா வந்துள்ளார். தலைநகர் டெல்லியில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் மோடி ஆகியோரை சந்தித்து இருநாட்டு உறவுகள் பற்றி பேசினார்.
இன்று டெல்லியில் பிரதமர் மோடியுடனான சந்திப்புக்கு பிறகு பேசிய இலங்கை அதிபர் அனுரகுமார திஸாநாயக்க, இரு நாட்டு உறவுகள், இலங்கை தமிழர்கள், தமிழக மீனவர்கள் பிரச்சனை பற்றியும் பேசினார். மேலும், பொருளாதார பிரச்னையை இலங்கை சந்தித்த போது இந்திய அரசு செய்த உதவியை குறிப்பிட்டு நன்றி தெரிவித்தார்.
அவர் பேசுகையில், ” இலங்கை பொருளாதார சிக்கலில் தவித்த போது இந்திய அரசு சுமார் 4 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு கடனுதவி மற்றும் மானிய உதவிகளை வழங்கி உதவி செய்தது. பொது சேவைகளை டிஜிட்டல் மயமாக்கியதில் இந்தியா மகத்தான வெற்றியைப் பெற்றுள்ளது. இலங்கையும் தற்போது அதே பாதையில் செல்கிறது. அந்த முயற்சியில் எனக்கு ஆதரவளிப்பதாக பிரதமர் மோடி உறுதியளித்தார்.” என தெரிவித்தார்.
மேலும், “இரு நாடுகளுக்கும் தொல்லையாக மாறியுள்ள மீனவர் பிரச்சினைக்கு நீடித்த மற்றும் நிலையான தீர்வைக் காண வேண்டும். அந்தப் பகுதியில் (தமிழக) உள்ள மீனவர்கள் சுருக்கும்டி வலைகளை கொண்டு மீன்பிடிக்கும் முறைகள் பின்பற்றப்பட்டு வருகின்றனர். அது மீன்பிடி தொழிலுக்கு அழிவை ஏற்படுத்தும் என்பதால் அதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.” என மீனவர்கள் பிரச்சனை குறித்து தெரிவித்தார்.
அடுத்ததாக, “இலங்கையின் அதிபரான பிறகு, இது எனது முதல் வெளிநாட்டுப் பயணம் டெல்லியில் அமைந்ததில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். எனக்கு விடுக்கப்பட்ட அழைப்பிற்காகவும், நான் உட்பட எங்கள் நாட்டு தூதுக்குழுவிற்கும் வழங்கப்பட்ட அன்பான விருந்தோம்பலுக்கும் இந்தியாவுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். பிரதமர் மோடி மற்றும் அதிபர் முர்முவுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். இந்த பயணம் இரு நாடுகளுக்கு இடையேயான ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்த வழி வகுத்தது.” என தெரிவித்தார்.
பிரதமர் மோடி இலங்கை அதிபருடனான சந்திப்பு குறித்து கூறுகையில், ” இரு நாட்டு நல்லிணக்கம் மற்றும் மறுசீரமைப்பு பற்றி விவாதிக்கையில், இங்குள்ள இலங்கை தமிழர்களின் கோரிக்கைகளை இலங்கை அரசு நிறைவேற்றும். ” என்று நம்பிக்கை தெரிவித்தார்.