எடியூரப்பாவுக்கு ஜாமினில் வெளிவர முடியாத பிடிவாரண்ட்! போக்சோ சிறப்பு நீதிமன்றம் உத்தரவு!
எடியூரப்பா : சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தொடரப்பட்ட வழக்கில் பாஜக மூத்த தலைவரும், கர்நாடக முன்னாள் முதல்வருமான எடியூரப்பாவுக்கு எதிராக ஜாமினில் வர முடியாத வகையில், கைது வாரண்டை பெங்களூர் குற்றவியல் நீதிமன்றம் பிறப்பித்தது.
கடந்த பிப்ரவரி 2-ம் தேதி சிறுமியை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக எடியூரப்பா மீது சிறுமியின் தாயார் அளித்த புகாரின் பேரில் சதாசிவம் நகர் போலீசார் எடியூரப்பா மீது கடந்த மார்ச் 14-ஆம் தேதி வழக்குப்பதிவு செய்தனர். இதனை தொடர்ந்து இந்த வழக்கு சிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது. இதனையடுத்து, எடியூரப்பா இந்த வழக்கு விசாரணைக்கு ஆஜராகுமாறு சிஐடிநேற்று சம்மன் அனுப்பியும் இருந்தது.
பின், தனக்கு ஆஜராக ஒருவாரம் கால அவகாசம் வேண்டும் என்று தனது வழக்கறிஞர்கள் மூலம் சிஐடிக்கு கால அவகாசம் கேட்டு இருந்தார். அதே சமயம் பாதிக்கப்பட்ட சிறுமியின் சகோதரர் எடியூரப்பாவை போக்ஸோ வழக்கில் கைது செய்யவேண்டும் என்றும் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனு செய்து இருக்கிறார்.
அந்த மனுவை ரத்து செய்யவேண்டும் என்றும் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் இவ்வழக்கிற்கு எதிராக வழக்கை ரத்து செய்யக்கோரி எடியூரப்பா மனுவும் செய்து இருந்தார். இந்த மனு நாளை விசாரணைக்கு வருகிறது.
இந்நிலையில், ஜூன் 17-தேதி தான் விசாரணைக்கு ஆஜர் ஆக முடியும் என எடியூரப்பா பதில் கூறியுள்ள நிலையில், டெல்லியில் உள்ள எடியூரப்பா, பெங்களூரு திரும்பினால் கைதாக வாய்ப்பு இருக்கிறது. தனக்கு முன் ஜாமீன் வேண்டும் என்றும் கர்நாடக நீதிமன்றத்தில் அவர் மனு கொடுத்துள்ள நிலையில், எடியூரப்பாவுக்கு எதிராக ஜாமினில் வர முடியாத வகையில், கைது வாரண்டை பெங்களூர் குற்றவியல் நீதிமன்றம் பிறப்பித்தது.
மேலும், எடியூரப்பா மீதான போக்சோ வழக்கில் நோட்டீஸ் வழங்கப்பட்டு இருக்கும் நிலையில், குற்றப்பத்திரிகை வரும் ஜூன் 15-ஆம் தேதிக்கு முன்னதாக சிஐடி போலீசாரால் தாக்கல் செய்யப்படும். அத்துடன், எடியூரப்பாவின் வாக்குமூலம் பெறப்படும். தேவை ஏற்பட்டால் எடியூரப்பா கைது செய்யப்படுவார் எனவும் கர்நாடக அமைச்சர்ஜி.பரமேஷ்வரா தெரிவித்துள்ளார்.