தென்பெண்ணை விவகாரம்.! மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி.!
தமிழகம் – கர்நாடகா மாநிலங்கள் இடையே நதிநீர் பங்கீடு என்பது வருடக்கணக்கில் தொடர்ந்து வருகிறது. ஏற்கனவே காவிரி நதிநீர் பங்கீடு விவகாரத்தில் மத்திய அரசு மற்றும் உச்சநீதிமன்றத்தில் பல்வேறு கோரிக்கைகளை தமிழக அரசு முன்வைத்தது. இதன் பலனாக தான் காவிரி ஒழுங்காற்று மையம், காவிரி மேலாண்மை வாரியம் போன்ற அமைப்புகளை மத்திய அரசு உருவாக்கியது.
காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான விவகாரங்கள் முதலில் இந்த இரு அமைப்புகள் வாயிலாக ஆலோசிக்கப்பட்டு முடிவுகள் எடுக்கப்படும். அதன் பின்னர் அதில் ஏதேனும் பிரச்சனை என்றால் மட்டுமே அந்த விவகாரங்கள் உச்சநீதிமன்றத்துக்கு கொண்டு செல்லப்படும்.
தற்போது காவிரி விவகாரம் போலவே, தென் பெண்ணை ஆறு விவகாரமும் உச்சநீதிமன்றம் வரை சென்றுள்ளது. தென்பென்னை ஆற்றின் குறுக்கே யர்கோல் எனும் பகுதியில் கர்நாடக அரசு அணை கட்ட மத்திய அமைச்சரவையில் அனுமதி கேட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து முதலில் உச்சநீதிமன்றம் சென்றது தமிழக அரசு. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், தமிழக அரசு முதலில் மத்திய அரசிடம் கோரிக்கை வைக்க வேண்டும். அதன் பின்னர் தான் உச்சநீதிமன்றம் வர வேண்டும் என கூறியது.
உச்சநீதிமன்றத்தின் உத்தரவுக்கு பிறகு மத்திய அரசிடம் , தென்பெண்ணை நதிநீர் பங்கீடு தொடர்பாக கோரிக்கை வைத்து அது பலனளிக்காததால் மீண்டும் உச்சநீதிமன்றம் சென்றது தமிழக அரசு. 2 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்ற இந்த விவகாரத்தில் பதில் அளித்த மத்திய அரசு தென்பெண்ணை நதிநீர் பங்கீடு தொடர்பாக தீர்ப்பாயம் அமைக்க 6 மாத காலம் அவகாசம் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தது.
ஆனால் மத்திய அரசின் இந்த கோரிக்கையை நிராகரித்து 4 வார காலத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என கூறியது. இந்த உத்தரவை அடுத்து இன்று தென்பெண்ணை நதிநீர் பங்கீடு தொடர்பாக வழக்கு உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரணை வந்த போது மத்திய அரசுக்கு சரமாரி கேள்விகள் கேட்கப்பட்டது.
அதில், தென்பெண்ணையாறு நீர் பங்கீடு விவகாரத்தில் இத்தனை நாட்கள் கால அவகாசம் கொடுத்தும் இன்னும் மத்திய அரசு இருமாநில நதிநீர் பங்கீடு தொடர்பாக நடுவர் மன்றம் அமைக்காதது ஏன்?, இந்த விவகாரம் இரு மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர் பங்கீடு என்பதை ஏன் மத்திய அரசு கருத்தில் கொள்ளவில்லை? எனவும் மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
நதிநீர் பங்கீடு தீர்ப்பாயம் இதுவரையில் அமைக்கப்படாதது குறித்து மத்திய அரசு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்துள்ளது.