காங்கிரஸ் ஆளும் மாநில முதல்வர்களுடன் சோனியா காந்தி இன்று முக்கிய ஆலோசனை!
முக்கிய எதிர்க்கட்சிகளின் தலைவர்களுடன் காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி இன்று ஆலோசனை.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நிறைவடைந்த நிலையில், காங்கிரஸ் ஆளும் மாநில முதலமைச்சர்கள் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்களுடன் காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி இன்று ஆலோசனை நடத்துகிறார்.
இன்று காணொளி வாயிலாக நடைபெற இருக்கும் ஆலோசனை கூட்டத்தில், பஞ்சாப் முதல்வர் அம்ரிந்தர் சிங், சட்டிஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகல், ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இவர்களை தொடர்ந்து திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, திமுக தலைவர் முக ஸ்டாலின், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், இடதுசாரி தலைவர்களான டி.ராஜா, சீத்தாராம் யெச்சூரி மற்றும் முக்கிய கட்சிகளின் தலைவர்கள் ஆலோசனையில் பங்கேற்கவுள்ளனர்.
சோனியா காந்தி தலைமையில் நடைபெற இருக்கும் ஆலோசனை கூட்டத்தில், தற்போது நடப்பு அரசியல் சூழல் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட உள்ளதாக காங்கிரஸ் கட்சியின் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நடந்து முடிந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்த நிலையில், அதுபோன்று தொடர்ச்சியாக எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து மத்திய அரசுக்கு எதிராக செயல்படுவது, மாநில தேர்தல்களில் கூட்டணி வியூகம் வகுப்பது உள்ளிட்டவை குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.