சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி பதவி விலக தயார்..? – நேற்றைய கூட்டத்தில் நடந்தது என்ன..!

உத்திரபிரதேசம் , பஞ்சாப் , கோவா , உத்தராகண்ட் மற்றும் மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வியை தழுவியது. அதிலும், குறிப்பாக ஆளும் மாநிலமாக இருந்த பஞ்சாபிலும் காங்கிரஸ் தோல்வியை தழுவியது.இதனால், காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ராகுல் காந்தி, பா. சிதம்பரம், பிரியங்கா காந்தி உள்பட முக்கிய காங்கிரஸ் தலைவர்கள் கலந்துகொண்டனர்.
கட்சியின் தோல்விக்கான காரணங்கள், எதிர்கால திட்டங்கள், கட்சியில் மேற்கொள்ள வேண்டிய சீர்திருத்தங்கள், நிர்வாக ரீதியிலான உட்கட்சி தேர்தல் தொடர்பாக காங்கிரஸின் காரிய கமிட்டி கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது.
எத்தகைய தியாகத்தையும் செய்யத் தயார்:
காங்கிரஸின் இந்த கூட்டம் சுமார் நான்கு மணி நேரம் நீடித்தது. இந்த கூட்டத்திற்கு பிறகு காங்கிரஸ் தலைவராக சோனியா காந்தி நீடிப்பது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. நடந்து முடிந்த 5 மாநில தேர்தல் தோல்விக்கு தாங்கள்தான் காரணம் என காரிய கமிட்டி கருதினால் கட்சியின் நலனுக்காக எத்தகைய தியாகத்தையும் செய்யத் தயார் என சோனியா காந்தி தெரிவித்ததாகவும் தகவல் வெளியானது.
இதுகுறித்து ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் பேசிய காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி வதேரா ஆகியோர் கட்சிக்காக பதவியை விட்டுக்கொடுக்க தயாராக உள்ளனர். ஆனால் நாங்கள் அனைவரும் அதை நிராகரித்தோம். என தெரிவித்தார்.
இடைக்கால தலைவராக சோனியா காந்தி:
கட்சியின் அமைப்புத் தேர்தல் நடத்தப்படும்வரை காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவராக சோனியா காந்தி தொடர்வார் என்றும், ஏப்ரல் மாதத்தில் சிந்தனைக் கூட்டம் நடத்தப்படும் என்று கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர். அதற்கு முன் காங்கிரஸ் காரிய கமிட்டி மீண்டும் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் கட்சி மூத்த தலைவருமான மன்மோகன் சிங் உள்பட 5 மூத்த காங்கிரஸ் தலைவர்கள் இக்கூட்டத்தில் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.