சந்திரசூட் உடன் புகைப்படம்., பலருக்கு எரிச்சல்.! பிரதமர் மோடி கடும் தாக்கு.!
நான் சந்திரசூட் வீட்டில் விநாயகர் சதுர்த்தி பூஜையில் கலந்து கொண்டதால் காங்கிரஸ் மற்றும் அதன் சுற்றுவட்டாரமும் கலக்கமடைந்துள்ளனர் என பிரதமர் மோடி உரையாற்றியுள்ளார்.
டெல்லி : கடந்த சில தினங்களுக்கு முன்னர், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் அவர்களின் டெல்லி இல்லத்தில் விநாயகர் சதுர்த்தி பூஜை நடைபெற்றது. இந்த நிகழ்வில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி இல்லத்தில் நடைபெற்ற ஆன்மீக நிகழ்வில் பிரதமர் கலந்து கொண்டது பேசுபொருளாக மாறியது .
இந்த சந்திப்பு குறித்து காங்கிரஸ், சிவசேனா உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினர் மட்டுமின்றி பல்வேறு மூத்த வழக்கறிஞர்களும் நாட்டின் பிரதமர், உச்சநீதிமன்ற நீதிபதி வீட்டிற்கு தனிப்பட்ட முறையில் செல்வது, அரசியல் சட்ட ரீதியாக ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல என்று தங்கள் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.
இந்த விமர்சனங்களுக்கு பதில் கொடுக்கும் விதமாக இன்று ஒடிசாவில் நடைபெற்ற அரசு நலத்திட்ட நிகழ்வில் பிரதமர் மோடி உரையாற்றினார். அவர் கூறுகையில், ” பிரித்து ஆட்சி செய்தல் என்ற கொள்கையில் செயல்பட்டவர்கள் ஆங்கிலேயர்கள். அவர்கள் விநாயகர் சதுர்த்தி விழாவில் மக்கள் ஒன்றுகூடுவதால் கொதிப்படைந்தனர்.
அதே மனநிலையில், இன்றும் இந்திய மக்களை பிளவுபடுத்தி, அவர்களை பிரிக்க முயலும் சிலர், விநாயகர் சதுர்த்தி விழாவில் மக்கள் ஒன்று கூடுவதால் எரிச்சல் அடைந்துள்ளனர். அதிகார வெறி கொண்டவர்கள் சிலர், நான் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் வீட்டில் விநாயகர் சதுர்த்தி பூஜையில் கலந்து கொண்டதால் காங்கிரஸ் கட்சியினரும், அதன் சுற்றுவட்டாரமும் கலக்கமடைந்துள்ளனர். அந்தப் புகைப்படங்களால் பலர் கலக்கமடைந்துள்ளனர். இந்த வெறுப்பூட்டும் சக்திகள் நாம்மை முன்னேற விட மாட்டார்கள். நாம் இன்னும் சாதிக்க வேண்டியது நிறைய இருக்கிறது. ” என்று சந்திரசூட் இல்லத்தில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி பூஜையில் கலந்து கொண்டது குறித்து எழுந்த விமர்சனங்களுக்கு பிரதமர் மோடி. பதிலளித்துள்ளார்