மீட்புப்பணியில் ராணுவம் சிறப்பாக செயல்படுகிறது.! ராகுல் காந்தி பாராட்டு.!
டெல்லி: கேரளா மாநிலம் வயநாடு பகுதியில் நேற்று அதிகாலை ஏற்பட்ட நிலச்சரிவு பாதிப்பு நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. இதுவரை 180க்கும் அதிகமானோர் இந்த நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் காணாமல் போயுள்ளதால் அவர்களை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் உயிரிழப்புகள் அதிகமாகும் என கூறப்படுகிறது.
இந்த மீட்பு பணிகளில் மாநில பேரிடர் மீட்பு குழுவினருடன், தேசிய பேரிடர் மீட்பு குழுவினர், இந்திய ராணுவத்தினரும் தீவிரமாக ஈடுப்பட்டு வருகின்றனர். சூரல்மலை , முண்டக்கை பகுதியில் பாலங்கள் , சாலைகள் நிலச்சரிவில் அடித்து செல்லப்பட்டதால் அங்கு மீட்பு பணிகள் பெரும் சவால்களை சந்தித்தன.
இப்படியான சூழலில், மீட்பு படையினர், ராணுவத்தினர் கடும் சிரமத்திற்குள்ளும், தற்காலிக பாலம் அமைத்து மீட்பு பணிகளில் ஈடுப்பட்டு வருகின்றனர். மேலும் விமானப்படை உதவியுடனும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த மீட்பு பணிகள் குறித்து எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி இன்று மக்களவையில் பாராட்டி பேசினார். மேலும், மத்திய அரசுக்கு கோரிக்கையும் முன்வைத்தார். அவர் கூறுகையில், கேரளா வயநாட்டில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தற்போது ஆதரவு அளிப்பது மிக முக்கியம். இந்த மீட்புப்பணிகளில் இந்திய ராணுவ வீரர்கள் மிகச்சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர்.
வயநாடு பகுதியில் சுற்றுச்சூழல் தொடர்பான பிரச்சனை உள்ளது என்பது தற்போது தெளிவாக தெரிய வந்துள்ளது. உயர் ரக தொழில்நுட்பங்களை பயன்படுத்தி இந்த சுற்றுசூழல் பிரச்சனைகளுக்கு தீர்வு காண வேண்டும். இயற்கை பேரிடர் தடுப்பு விவகாரங்களின் மத்திய அரசு போதிய நடவடிக்கை எடுக்க வேண்டும். கூடுதலாக தேவைப்படும் மீட்பு பணிகளை மத்திய அரசு மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்களவையில் ராகுல் காந்தி குறிப்பிட்டு பேசினார்.