தேர்தல் வியூகம் வகுக்க இத்தனை கோடியா? பிரஷாந்த் கிஷோர் சொன்னது என்ன?
ஒரு கட்சிக்கு தேர்தலின் போது அரசியல் வியூகங்கள் வகுத்து கொடுக்க தான் இத்தனை கோடிகளை வசூலிப்பதாக பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார்.
டெல்லி : ஒரு அரசியல் கட்சிக்குத் தேர்தலின் போது வியூகம் வகுத்துக் கொடுத்து பிரச்சாரம் முதல் தேர்தல் முடியும் வரை அனைத்தையும் ஏற்படுத்திக் கொடுக்கும் நிறுவனங்கள் இந்தியா உட்பட பல நாடுகளில் உள்ளது. அமெரிக்கத் தேர்தலில் கூட இது போன்ற நிறுவனங்களின் பங்கு வகித்து வருகிறது.
இந்தியாவில் இது போல வியூகம் அமைத்துக் கொடுப்பதில் அதிகம் பேசப்படும் பெயர் என்றால் அது பிரஷாந்த் கிஷோர் தான். கடந்த 2014-ம் ஆண்டு மோடி அரசு இந்தியாவில் ஆட்சியமைக்க போது,IP-PAC நிறுவனம் தான் வியூகம் வகுத்துக் கொடுத்தது. மேலும், அப்போது தான் பிரசாந்த் கிஷோரின் பெயரும் இந்தியா முழுவதும் தெரியவந்தது.
அதன்பின், இவர் வகுத்த வியூகத்தால் தான் கடந்த 2021-ம் ஆண்டு இவர் தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் ஆட்சியமைத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதன் பிறகு இவர் IP-PACலிருந்து வெளியேறிய இவர், ஜன் சுராஜ் என்ற இயக்கத்தை உருவாக்கினார்.
தற்போது, அது அரசியல் கட்சியாக உருவெடுத்ததுடன் வரும் 2025-ம் ஆண்டு பிகாரில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலிலும் போட்டியிட உள்ளனர். இந்த நிலையில், பெலகஞ்ச் தொகுதியில் ஜன சுராஜ் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பிரசாந்த் கிஷோர் கடந்த அக்டோபர். 31-ம் தேதி பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது ஒரு தேர்தலில் கட்சிக்கு வியூகம் வகுத்துக் கொடுக்கத் தான் வசூலிக்கும் கட்டணம் குறித்து அவர் வெளிப்படையாகப் பேசி இருக்கிறார். முன்னதாக அவர் கட்சி நடத்த நிதி எங்கிருந்து வருகிறது என்ற ஒரு கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளிக்கும் விதமாகவே அவர் இந்த பேச்சை முன்வைத்துள்ளார்.
அவர் பேசிய போது, “நான் வகுத்துக் கொடுத்த வியூகத்தின்படி தான் தற்போது வெவ்வேறு மாநிலங்களில் 10 அரசாங்கங்கள் ஆட்சி செய்து வருகின்றன. அப்படியிருக்க, தேர்தல் பிரச்சாரத்திற்காகப் பந்தல் போட்டு, போஸ்டர் ஓட்டுவதற்குக் கூடவா என்னிடம் பணம் இருக்காது…? அவ்வளவு பலவீனமானவன் என என்னை நினைத்தீர்களா…?
பீகாரில் நான் வசூலிக்கும் கட்டணத்தை யாரும் கேள்விப்பட்டிருக்கக் கூட மாட்டார்கள். ஒரே ஒரு தேர்தலில் ஒரு கட்சிக்கு நான் வியூகம் வகுத்துக் கொடுக்க, ரூ.100 கோடி முதல் அதற்கும் மேலே அவர்களிடம் இருந்து வசூல் செய்வேன்.
நான் அடுத்து ஒரு அட்வைஸ் கொடுத்தாலே, சுமார் 2 ஆண்டுகளுக்கு எனது கட்சிக்குப் பிரச்சாரம் செய்வதற்கான நிதியை என்னால் திரட்டிவிட முடியும்”, என பிரசாந்த் கிஷோர் பேசி இருந்தார். இப்படி பிரசாந்த் கிஷோர் பொது வெளியில் பேசியது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.