இதுவரை 3.!கர்நாடகாவை தொடர்ந்து குஜராத்திலும் HMPV வைரஸ் தொற்று!
இந்தியாவில் இதுவரை 3 குழந்தைகளுக்கு HMPV வைரஸ் தொற்று பரவியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
டெல்லி : சீனாவில், 14 வயதுக்கு உட்பட சிறார்களை தாக்கும் HMPV வைரஸ் தொற்றுகள் தற்போது கணிசமான அளவில் அதிகரிக்க தொடங்கிவிட்டன. முதலில் மற்ற நாடுகளில் இந்த தொற்று காணப்படவில்லை என்று கூறினாலும், இந்தியாவில் 3 HMPV வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது.
கொரோனா பெருந்தொற்று பரவிய காலத்தில் மத்திய அரசு அறிவுறுத்தியிருத்த அதே வழிகாட்டுதல் நெறிமுறைகள் தற்போதும் மாநில அரசுகளால் வலியுறுத்தப்பட்டு வருகின்றன. தற்போது கர்நாடகாவில் 2 HMPV வைரஸ் தொற்றுகளும், குஜராத்தில் ஒரு வைரஸ் தொற்றும் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போது வரை வெளியான தகவலின்படி, குஜராத் மாநிலம் அகமதாபாத் சந்த்கேடா பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் 2 வயது குழந்தைக்கு வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது. கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் 3 மாத பெண் குழந்தை, 8 மாத ஆண் குழந்தை என இரு கைக்குழந்தைகளுக்கு HMPV தொற்று உறுதி செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த தொற்று குறித்து குஜராத் மாநில அரசு கூறுகையில், கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த குழந்தை ராஜஸ்தானில் இருந்து சிகிச்சைக்காக அகமதாபாத் வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கர்நாடகா அரசு சார்பில் கூறுகையில், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் (ICMR) வழக்கமான பரிசோதனையின் போது கண்டறியப்பட்டது என்றும் பெண் குழந்தை சிகிச்சை முடிந்து வீடு திரும்பியது என்றும், ஆண்குழந்தைக்கு சிகிச்சை தொடர்கிறது என்றும், பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களில் முகக்கவசம் அணிந்து செல்ல அறிவுறுத்தபட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. தொற்று ஏற்பட்டுள்ள 2 குழந்தைகளுக்கும் வெளிநாட்டு பயண தொடர்புகள் எதுவும் இல்லை என்பதால் எவ்வாறு வைரஸ் பரவியது என மருத்துவ விசாரணை தொடர்ந்து வருகிறது.