ஆர்.எஸ்.எஸ் குறித்து அவதூறு கருத்து..! ராகுல் காந்திக்கு எதிராக மேலும் ஒரு வழக்கு..!
ஆர்.எஸ்.எஸ் குறித்து அவதூறு கருத்து தெரிவித்ததாக ராகுல் காந்திக்கு எதிராக அவதூறு வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
பாரத் ஜோதா ஒற்றுமை யாத்திரையின் போது ஆர்.எஸ்.எஸ் குறித்து அவதூறு கருத்து தெரிவித்ததாக முன்னாள் எம்பியும், காங்கிரஸ் தலைவருமான ராகுல் காந்தி மீது உத்தரகண்ட் நீதிமன்றத்தில் அவதூறு வழக்குத் தொடரப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி மாதம் நடந்த போது ஒற்றுமை யாத்திரையின் போது ஹரியானாவின் அம்பாலாவில் தெரு முனை கூட்டத்தில் உரையாற்றிய ராகுல் காந்தி, ஆர்எஸ்எஸ் உறுப்பினர்கள் “21 ஆம் நூற்றாண்டின் கௌரவர்கள்” என்று கூறியுள்ளார்.
அவர் கூறுகையில், “கௌரவர்கள் யார்.? 21ஆம் நூற்றாண்டு கௌரவர்களைப் பற்றி முதலில் நான் கூறுகிறேன். அவர்கள் காக்கி அரைக் காற்சட்டை அணிந்து, கையில் லத்தியை ஏந்தியுள்ளனர் என்றும் இந்தியாவின் 2 முதல் 3 பணக்காரர்கள் கௌரவர்களுடன் இருக்கிறார்கள்” என்று ஆர்எஸ்எஸ்ஸைக் குறிப்பிட்டு ராகுல் காந்தி கூறியுள்ளார்.
இதையடுத்து தற்பொழுது, ஆர்.எஸ்.எஸ் தொண்டர் கமல் பதவுரியா என்பவரின் புகாரின் பேரில் வழக்கறிஞர் அருண் பதாரியா, உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள ஹரித்வார் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்துள்ளார். இந்த வழக்கு ஏப்ரல் 12ஆம் தேதி நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. இந்த வழக்கு ராகுல் காந்தி மீது தொடரப்பட்டுள்ள இரண்டாவது அவதூறு வழக்கு ஆகும்.
முன்னதாக, பிரதமர் மோடி குறித்து அவதூறாக பேசிய வழக்கில் ராகுல்காந்திக்கு குஜராத் சூரத் நீதிமன்றம் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்ததைத் தொடர்ந்து மக்களவை செயலகம் அவரை எம்.பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்து அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.