ஹிமாச்சலில் மோசமடையும் நிலைமை.. 5 பேர் உயிரிழப்பு, 50க்கும் மேற்பட்டோர் மாயம்.!
சிம்லா : ஹிமாச்சல் பிரதேசத்தின் சில பகுதிகளில் மேக வெடிப்பு ஏற்பட்டு அதிகனமழை பெய்ததில் 5 பேர் பலியாகியுள்ளதாகவும், 50-க்கும் மேற்பட்டோர் மாயமாகியுள்ளதாகவும் மாநில அரசு அறிவித்துள்ளது.
மேலும் அதி தீவிர கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையமும் ரெட் அலர்ட் விடுத்துள்ளதால் நிலமை அங்கு மோசமடைந்துள்ளது. சாலைகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டதால், மீட்பு பணிகள் சவாலானதாக உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
நிலச்சரிவு காரணமாக மணாலி-சண்டிகர் தேசிய நெடுஞ்சாலை பல இடங்களில் சேதமடைந்துள்து. மண்டியின் ராம்பன் கிராமத்திற்கு செல்லும் அனைத்து சாலைகளும் பல இடங்களில் வெள்ளம் போல் ஓடுகிறது.
வெள்ளப்பெருக்கு எடுத்து ஓடும் பாதையில் இருந்த வீடுகள் இடிந்து, பல வாகனங்கள் இடிபாடுகளுக்குள் புதைந்துள்ளன. அவற்றை ஜேசிபி உதவியுடன் வெளியே இழுக்கும் முயற்சி நடந்து வருகிறது. மண்டியிலும் நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, இமாச்சலப் பிரதேச முதல்வர் சுக்விந்தர் சிங் சுகுவிடம் பேசி, மாநிலத்தில் மேக வெடிப்பு காரணமாக ஏற்பட்டுள்ள நிலைமையை ஆய்வு செய்து, மத்திய அரசின் அனைத்து உதவிகளையும் வழங்கும் அவருக்கு உறுதியளித்துள்ளார்.