சீதாராம் யெச்சூரி மறைவு: பொதுமக்கள் அஞ்சலி செலுத்த ஏற்பாடு.!
மறைந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரியின் உடல் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு தானமாக கொடுக்கப்பட்டது.
டெல்லி: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி நுரையீரல் தொற்று காரணமாக, கடந்த ஆகஸ்ட் 19-ஆம் தேதி சிகிச்சைக்காக டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில், அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று பிற்பகல் 3.05 மணிக்கு உயிரிழந்தார். அவரது மறைவுக்கு பல்வேறு அரசியல் தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இதனிடையே, நேற்றைய தினமே மறைந்த சிபிஎம் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரியின் உடல் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு தானமாக வழங்கப்பட்டுள்ளது. கற்பித்தல், ஆராய்ச்சி நோக்கத்துக்காக உடலை அவரது குடும்பத்தினர் தானம் செய்துள்ளனர்.
இந்த நிலையில், அவரது உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்தும் விதமாக, நாளை (செப்.14-ம் தேதி) அக்கட்சி தலைமையகத்தில் வைக்கப்படும் என CPM தெரிவித்துள்ளது. அன்றைய தினம் காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை பொதுமக்கள் அஞ்சலி செலுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மறைந்த CPM பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி நன்கு தமிழ் பேச கூடியவர். சென்னையில் பிறந்தவர் என்பதாலும், ஆரம்பகாலத்தில் தமிழ்நாட்டில் வசித்ததாலும் தமிழ் நன்கு அவருக்கு சரளமாக வரும்.
பொதுக்கூட்டங்களில் தமிழிலும் பேசுவார். வட இந்திய அரசியல்வாதிகளில் நன்கு தமிழ் பேசுவோரில் இவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.