கொரோனாவால் உயிரிழந்த 77 வழக்கறிஞர்களுக்கு உச்சநீதிமன்றத்தில் மௌன அஞ்சலி!
கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்த 77 உச்சநீதிமன்ற வழக்கறிஞர்களுக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.
கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக உலகம் முழுவதிலும் கொரோனா வைரஸ் மிக அதிக அளவில் பரவி வருகிறது. இந்நிலையில், கடந்த சில மாதங்களாக இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை மிக தீவிரமாக பரவி வந்த நிலையில் பல மருத்துவர்கள், வழக்கறிஞர்கள், செவிலியர்கள் சுகாதார துறையை சேர்ந்தவர்கள் மற்றும் முக்கியமான அமைச்சர்கள் கொரோனா இரண்டாம் அலையில் உயிரிழந்தனர். மேலும், இந்த கொரோனா தொற்று காரணமாக உச்சநீதிமன்றத்தை சேர்ந்த 77 வழக்கறிஞர்கள் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.
நாடு முழுவதும் கொரோனா தொற்று கட்டுக்குள் வந்துள்ளதையடுத்து நாட்டில் உள்ள உச்ச நீதிமன்றம் முதல் மாவட்ட நீதிமன்றங்கள் வரை அனைத்தும் மீண்டும் திறக்கப்பட்டு, நீதிமன்றப் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று காலை உச்ச நீதிமன்றத்திற்கு வந்த தலைமை நீதிபதி என்.வி.ரமணா அவர்கள் தனது நீதிமன்ற பணியைத் தொடங்குவதற்கு முன்பதாக கொரோனவால் உயிரிழந்த உச்சநீதிமன்ற வழக்கறிஞர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தியதுடன், உயிரிழந்த 77 உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் குடும்ப உறுப்பினர்களுக்கு இரங்கலும் தெரிவித்துள்ளார்.