ஜூன் 14 வரை ஊரடங்கு நீட்டிப்பு.. காலை 7 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை கடைகள் திறக்க அனுமதி – சிக்கிம் அரசு..!
- சிக்கிமில் ஊரடங்கை மேலும் ஒரு வாரம் நீட்டிப்பதாக சிக்கிம் அரசு அறிவிப்பு.
- மளிகை மற்றும் காய்கறி கடைகள் இப்போது காலை 7 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை திறந்திருக்கும்.
சிக்கிம் மாநிலத்தில் கொரோனா 2 வது அலையின் தாக்கம் அதிகரிப்பு காரணமாக ஊரடங்கை அமல்படுத்தியிருந்தது. இதையடுத்து அங்கு கொரோனா தொற்று புதிய பாதிப்பு 20 ஆயிரத்திற்கும் கீழ் குறையத் தொடங்கியது. தற்போதுள்ள ஊரடங்கு காலம் ஜூன் 7 ஆம் தேதி முடிவடைய திட்டமிடப்பட்டிருந்தது.
இதையடுத்து கொரோனா தொற்று பரவலை மேலும் குறைக்க சிக்கிம் அரசு ஊரடங்கை நீட்டித்துள்ளது. கொரோனா தொற்றுநோயைக் கருத்தில் கொண்டு சிக்கிம் அரசாங்கம் ஞாயிற்றுக்கிழமை மாநிலம் தழுவிய ஊரடங்கை ஜூன் 14 வரை நீட்டிப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இருப்பினும், ஹார்டுவேர் கடைகளை காலை 7 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை திறந்திருக்க அனுமதிப்பது போன்ற சில தளர்வுகளையும் மாநில அரசு அறிவித்தது. மளிகை மற்றும் காய்கறி கடைகள் இப்போது காலை 7 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை திறந்திருக்கும். இது இன்னும் இரண்டு மணி நேரம் நீட்டிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
மேலும் இமயமலை மாநிலத்தில் தொற்றுநோயை நிர்வகிப்பது குறித்து மறுஆய்வு செய்ய முதலமைச்சர் பிரேம் சிங் தமாங் தலைமையில் நடைபெற்ற உயர்மட்டக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என கூறப்படுகிறது. அந்த கூட்டத்தில் அமைச்சரவை அமைச்சர்கள், தலைமைச் செயலாளர், காவல்துறை இயக்குநர் ஜெனரல் மற்றும் பிற மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
மேலும் ஜூன் மாதத்தில் 18 முதல் 44 வயதுக்குட்பட்ட 65,000 பேருக்கு தடுப்பூசி போட மாநில அரசு முடிவு செய்துள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.