சிக்கலில் சிக்கியுள்ள சிக்கீம் முதல்வர்! 6 வருட தடை என்னவானது?!
சிக்கிம் மாநிலத்தில் அண்மையில் சில மாதங்களுக்கு முன் அங்கு பொதுத் தேர்தல் நடைபெற்றது. அந்த பொதுத்தேர்தலில் இதற்கு முன்னர் முதல்வராக இருந்த பிரேம் சிங் என்பவரின் கட்சி அபார வெற்றி பெற்றது. அதனால் பிரேம் சிங்கை முதல்வராக அக்கட்சி அறிவித்தது. ஆனால் அவர் முதலமைச்சராக நீட்டிக்க ஒரு சிக்கல் இருந்து வந்தது.
அதாவது அவர் 1990 காலகட்டங்களில் சிக்கிம் மாநில கால்நடை துறை அமைச்சராக இருந்து வந்துள்ளார். அப்போது ஏற்பட்ட ஊழல் புகாரின் காரணமாக அவர் மீது 2003இல் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கு விசாரணையானது 2017 ஆம் ஆண்டு முடிவடைந்து, தீர்ப்பு அளிக்கப்பட்டது. அதன்படி அவர் 2018 ஆகஸ்ட் வரை ஓராண்டு சிறையில் இருந்தார்.
ஓராண்டு சிறையில் இருந்த காரணத்தால் அவருக்கு 6 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட தேர்தல் ஆணையம் தடை விதித்தது. இந்நிலையில் தற்போது அவர் கட்சி அதிக இடங்களை பெற்றுள்ளதால்,
அவரை முதல்வராக அவர் கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் தேர்வு செய்துள்ளனர். இதனால் அவர் இன்னும் ஆறு மாதத்திற்குள் சிக்கிம் மாநிலத்தில் ஏதேனும் ஒரு தொகுதியில் போட்டியிட்டு ஜெயிக்க வேண்டும். இது தொடர்பாக தலைமை தேர்தல் ஆணையத்திற்கு பிரேம் சிங் சார்பில் மனு அளிக்கப்பட்டது.
அந்த மனுவில் தான் இன்னும் ஆறு மாதத்திற்குள் ஒரு தொகுதி சட்டமன்ற தொகுதியில் வெற்றி பெற வேண்டும். எனவே, தாங்கள் விதிக்கப்பட்ட தடையை குறைத்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன் என குறிப்பிடப்பட்டிருந்தது. அதற்கு சம்மதம் தெரிவித்து 6 ஆண்டுகள் தடையை 13 மாதங்கள் ஆக மாற்றி தேர்தல் ஆணையம் அறிவித்தது. எனவே, அவர் விரைவில் சிக்கிம் மாநிலத்தில் ஒரு தொகுதியில் போட்டியிட்டு ஜெயித்து முதல்வராக தொடர்வாரா என எதிர்பார்க்கப்படுகிறது.