பெட்ரோல் தட்டுப்பாடு… குதிரையில் உணவு டெலிவரி.. வைரலாகும் வீடியோ..!
விபத்து ஏற்படுத்திவிட்டு தப்பியோடும் குற்றத்திற்கான ஹிட் அண்ட் ரன் (Hit and Run) வழக்குகளில் வாகனம் ஓட்டுபவர்களுக்கு கடும் அபராதம் மற்றும் சிறை தண்டனை விதிக்கும் வகையில் மத்திய அரசு புதிய சட்டம் கொண்டு வந்துள்ளது. இதை கண்டித்து நாடு முழுவதும் லாரி டிரைவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் பெட்ரோல், டீசல் கொண்டு செல்வதில் முடக்கம் ஏற்பட்டுள்ளது. வடமாநிலங்களில் பல இடங்களில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையில், ஹைதராபாத்தில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு என்ற செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் வாகன ஓட்டிகள் பெட்ரோல் நிலையங்களுக்கு ஓடினர். இதன் காரணமாக கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பல இடங்களில் எரிபொருள் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. “நோ ஸ்டாக்” போர்டுகள் வைக்கப்பட்டது. இந்த நிலைமை காரணமாக, ஆன்லைன் உணவு விநியோக ஊழியர்கள் கடுமையான சிரமங்களை எதிர்கொள்ள நேர்ந்தது. உரிய நேரத்தில் உணவு வழங்க முடியவில்லை என புகார் எழுந்தது.
இந்நிலையில், ஹைதராபாத்தில் ஆன்லைன் உணவு விநியோக தளமான Zomato ஊழியர் ஒருவர் இந்த இக்கட்டான சூழ்நிலையில் குதிரையில் சவாரி செய்யும் வீடியோ ஓன்று வெளியானது. இதுகுறித்து அவரிடம் கேட்டபோது பெட்ரோல் இல்லாததால் வண்டியை வெளியே எடுக்க முடியவில்லை என்றும், சரியான நேரத்தில் உணவு வழங்குவதற்காக குதிரை மூலம் உணவு டெலிவரி செய்கிறேன் என கூறினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
HYDERABADI THINGS!
A Zomato delivery person goes riding a horse to deliver food! The city came to a grinding halt yesterday after most fuel stations put up ‘no stock’ board owing to truckers strike.
City isn’t still fully on the track with the shortage woes still continuing.… pic.twitter.com/g6VnKkP3e5
— Revathi (@revathitweets) January 3, 2024
சமீபத்தில் நடந்த நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில், இந்திய குற்றவியல் சட்டம் (ஐபிசி), குற்றவியல் நடைமுறை சட்டம் (சிஆர்பிசி) மற்றும் இந்திய சாட்சிகள் சட்டம் (ஐஇசி) ஆகிய சட்டங்களுக்கு மாற்றாக, பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய சக்ஷ்யா, பாரதிய நகரிக் சுரக்ஷா 3 ஆகிய புதிய சட்டங்களை சில திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டு குடியரசு தலைவரின் ஒப்புதலும் பெறப்பட்டது.
இதற்கு முன்னர் விபத்து ஏற்படுத்திவிட்டு தப்பியோடும் குற்றத்திற்கான (Hit and Run) அதிகபட்ச சிறை தண்டனை மூன்று ஆண்டுகள் என்றுதான் இருந்திருந்தது. அந்த சட்டம் தற்போது திருத்தம் செய்யப்பட்டு அதன்படி, விபத்து ஏற்படுத்திவிட்டு தப்பியோடினால்,10 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், ரூ.7 லட்சம் வரை அபராதமும் விதிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
இதனால் நாடு முழுவதும் உள்ள லாரி, பேருந்து ஓட்டுனர்கள் கடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று லாரி தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசு செய்துள்ளது. இதையடுத்து, ஓட்டுநர்கள் போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெற்றனர்.