அதிர்ச்சி : கர்நாடகாவில் 100-க்கும் மேற்பட்ட நாய்கள் விஷம் வைத்து கொலை!
கர்நாடகாவில் 100-க்கும் மேற்பட்ட நாய்கள் விஷம் வைத்து கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில நாட்களாகவே நாடு முழுவதும் உள்ள பல்வேறு மாநிலங்களிலும் நாய்கள், குரங்குகள், மயில்கள் ஆகிய விலங்குகளுக்கு எதிரான வதை தொடர்ந்து கொண்டே இருக்கிறது. தற்போது கர்நாடக மாநிலத்தில் உள்ள ஷிவமோகா மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட நாய்களுக்கு விஷம் வைத்து கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக காவல் துறையினருக்கும், விலங்கினங்கள் மீட்பு படைக்கும் கிராம மக்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து கிராமத்திற்கு சென்று அதிரடி சோதனையில் ஈடுபட்ட காவல்துறையினர், நூற்றுக்கும் அதிகமான நாய்களின் உடல்கள் புதைக்கப்பட்ட நிலையில் இருந்ததாக தெரிவித்துள்ளனர். மேலும் கால்நடை மருத்துவர்கள் மற்றும் காவலர்களின் உதவியோடு இந்த நாய்களின் உடல்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. இது குறித்து ஷிவமோகா மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கூறுகையில், இதை கிராம பஞ்சாயத்து அலுவலர்கள் தான் செய்துள்ளதாகவும், அவர்களுக்கு எதிராக வழக்கு பதிவு செய்துள்ளதாகவும் கூறியுள்ளார். ஆனால், கிராம பஞ்சாயத்து இதை மறுத்துள்ளது.
மேலும் கால்நடை மருத்துவர்கள் சம்பவ இடத்தில் ஆய்வு நடத்தி வருவதாகவும், இது தொடர்பாக விரைவில் அறிக்கை சமர்ப்பிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். எதற்காக கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டுள்ளது என்பது குறித்த முழுமையான விபரம் இன்னும் வெளியாகவில்லை எனவும், பிரேதப் பரிசோதனைக்குப் பின்பதாகவும், கால்நடை மருத்துவர்களின் ஆய்வுக்குப் பின்னும் தான் உண்மை தெரிய வரும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.