அதிர்ச்சி.. ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேர் மர்ம மரணம்!
மகாராஷ்டிராவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேர் மர்மமாக இறந்து கிடந்தது கண்டுபிடிப்பு.
மகாராஷ்டிரா மாநிலம் சாங்கிலி மாவட்டத்தில் உள்ள மைசால் என்ற ஊரில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேர் மர்மமான முறையில் இன்று இறந்து கிடந்தது காவல்துறையால் கண்டுபிடிக்கப்பட்டது. தலைநகர் மும்பையில் இருந்து 350 கிமீ தொலைவில் உள்ள சாங்லி மாவட்டத்தில் உள்ள மைசாலில் உள்ள ஒரு வீட்டில் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டன. ஒரு வீட்டில் ஒன்பது உடல்களை கண்டெடுத்தோம் என சாங்லி காவல் கண்காணிப்பாளர் தீக்ஷித் கெடம் கூறியுள்ளார். அதாவது, ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேரில், ஒரே வீட்டில் 3 பேர் ஓர் இடத்திலும், 6 பேர் வீட்டில் வேறொரு இடத்தியிலும் இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்த 9 பேரும் தற்கொலை செய்துகொண்டு இருக்கலாம் என உடல்களை மீட்ட அம்மாநில காவல்துறை சந்தேகித்துள்ளது. எனினும், பிரேத பரிசோதனைக்கு பிறகே இறப்புக்கான சரியான காரணம் தெரியவரும் என்றும் இறந்தவர்கள் விஷத்தை உட்கொண்டதாக சந்தேகிக்கப்படுவதாகவும் அதிகாரி தெரிவித்துள்ளார். இறந்தவர்கள் சகோதர்களான மாணிக், பொபட் யாலப்பா வான்மோர் குடும்பத்தினர் ஆவர் என்று போலீஸ் தகவல் தெரிவித்துள்ளது. மாணிக், அவரது தாயார், மனைவி மற்றும் குழந்தைகள் ஒருபுறம் இறந்து கிடந்தனர். பொபட் யாலப்பா வான்மோர், அவரது மனைவி மற்றும் 2 குழந்தைகள் வேறொரு இடத்தில் இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது அப்பகுதியில் பெரும் பரபரப்பாக காணப்படுகிறது.