கேரளாவில் ஷிகெல்லா பாக்டீரியா தொற்று.. 11 வயது சிறுவன் உயிரிழப்பு..!
கேரளாவில் கொரோனா வைரஸ் பரவல் மத்தியில் ஒரு புதிய நோய் பரவிவருகிறது. ஷிகெல்லா என்ற பாக்டீரியா வகை தொற்று நோய் கோழிக்கோடு அருகே கோட்டம்பரம்பு முண்டிகலின் பகுதியில் உறுதி செய்யப்பட்டது. இந்த ஷிகெல்லாவால் 25 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த சில நாட்களாக கேரளாவில் ஷிகெல்லா பாதிப்பு அதிகரித்து வருகிறது. நோய் பரவுவது குறித்து தெளிவாக தெரியவில்லை என்றாலும், ஒரு ஆரம்ப ஆய்வில் நோய் பரவுவது நீர் மூலமாகவே என தெரிய வந்துள்ளது. இந்த நோய் முக்கியமாக கழிவுநீர் மற்றும் அசுத்தமான உணவு மூலம் பரவுகிறது. இந்த ஷிகெல்லா தொற்றால் 11 வயது சிறுவன் உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து அப்பகுதியில் உள்ள 120 கிணறுகளில் குளோரின் கலந்து சுத்தப்படுத்தும் பணியை தொடங்கினர்.
கடலுண்டி, பாரூக், பெருவாயல் மற்றும் வஜூர் பகுதிகளிலும் ஷிகெல்லாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த எல்லா இடங்களிலும் ஒரு வாரமாக தொடர்ந்து தற்காப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது. ஷிகெல்லா பெரியவர்களை விட குழந்தைகளை அதிகம் பாதிக்க வாய்ப்புள்ளது என கூறப்படுகிறது.
அறிகுறிகள்:
வயிற்றுப்போக்கு, காய்ச்சல், வயிற்று வலி, வாந்தி, சோர்வு மற்றும் மலத்தில் உள்ள இரத்தம் ஆகியவை ஷிகெல்லாவின் முக்கிய அறிகுறிகளாகும். இந்த நோய் முக்கியமாக குடல்களை பாதிக்கிறது. இதன் விளைவாக, மலத்துடன் இரத்தமும் காணப்படுகிறது. நோயாளியுடன் நேரடி அல்லது மறைமுக தொடர்பு மூலம் இந்த நோய் எளிதில் பரவுகிறது. அறிகுறிகள் இரண்டு முதல் ஏழு நாட்கள் வரை நீடிக்கும் என கூறப்படுகிறது.
இந்த அறிகுறிகள் தோன்றியவுடன் சிகிச்சை பெற வேண்டும் என்று சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.