சரத் பவார் தனது முடிவை பரிசீலனை செய்ய சம்மதம் – அஜித் பவார்
NCP தலைவர் பதவியில் இருந்து விலகும் முடிவை மறுபரிசீலனை செய்ய சரத் பவார் சம்மதம் என அஜித்பவார் தகவல்.
தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக சரத் பவார் இன்று காலை அறிவித்திருந்தார். மும்பையில் நடைபெற்ற தான் எழுதிய லோக் மாஜே சங்கதி என்ற புத்தகத்தின் வெளியீட்டு விழாவில் சரத் பவார் இவ்வாறு அறிவித்தார். அடுத்த ஆண்டு மகாராஷ்டிராவில் சட்டப்பேரவை தேர்தலும், மக்களவைத் தேர்தலும் நடைபெற உள்ள நிலையில், சரத் பவாரின் இந்த திடீர் அறிவிப்பால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது.
என்.சி.பி தலைவர் பதவியை ராஜினாமா செய்த பிறகு, அந்த பதவியை யாருக்கு வழங்குவது என்பதை முடிவு செய்ய குழு அமைக்கப்படும் என்றும் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து மூத்த தேசிய காங்கிரஸ் தலைவர்கள் குழு முடிவு செய்யும் எனவும் சரத் பவார் கூறியிருந்தார். குழுவில் சுப்ரியா சுலே, அஜித் பவார், பிரபுல் படேல், ஜெயந்த் பாட்டீல், அனில் தேஷ்முக், ராஜேஷ் தோபே, சாகன் புஜ்பால் மற்றும் பலர் உட்பட மூத்த உறுப்பினர்கள் இடம்பெற்றுள்ளனர்.
தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்த சரத் பவார் முடிவிற்கு எதிராக தலைவர்கள், தொழிலாளர்கள் கோஷங்களை எழுப்பி, இதனை திரும்ப பெற வேண்டும் எனவும் வலியுறுத்தி வந்தனர். இதனைத்தொடர்ந்து, பவார் மகள் சுப்ரியா சுலேவும், அஜித் பவாரும் கூட்டாக தேசியவாத தொண்டர்களை சந்தித்தனர்.
தேசியவாத காங்கிரஸ் தலைவர் பதவியில் சரத்பவார் தொடர வேண்டும் என்று தொண்டர்கள் வலியுறுத்தினர். இந்த நிலையில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் தனது ராஜினாமா முடிவை மறுபரிசீலனை செய்ய சம்மதம் தெரிவித்துள்ளதாக அஜித்பவார் கூறியுள்ளார். NCP தலைவர் பதவியில் இருந்து விலகும் முடிவை மறுபரிசீலனை செய்ய சரத் பவார் 2, 3 நாட்களாகும் எனவும் தெரிவித்துள்ளார்.