பாலியல் வழக்கு: எடியூரப்பா மீதான கைது வாரண்ட் நிறுத்திவைப்பு!
கர்நாடகா : எடியூரப்பாவுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட கைது வாரண்ட்டை தற்காலிகமாக நிறுத்தி வைத்து கர்நாடக உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தொடரப்பட்ட வழக்கில், நேற்றைய தினம் பாஜக மூத்த தலைவரும், கர்நாடக முன்னாள் முதல்வருமான எடியூரப்பாவுக்கு எதிராக ஜாமினில் வர முடியாத வகையில், கைது வாரண்டை பிறப்பித்தது பெங்களூர் குற்றவியல் நீதிமன்றம்.
இந்த நிலையில், கைது வாரண்டை தடை செய்ய வேண்டும் என்றும், முன்ஜாமீன் வழங்க வேண்டும் என கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார் எடியூரப்பா. அந்த முன்ஜாமீன் மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக தொடரப்பட்டுள்ள போக்சோ வழக்கில், எடியூரப்பாவுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட கைது வாரண்ட்டை தற்காலிகமாக நிறுத்தி வைத்து கர்நாடக உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, அடுத்த விசாரணை தேதி வரை, கைது நடவடிக்கை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஜூன் 17ம் தேதி எடியூரப்பா காவல்துறையின் முன்பு ஆஜராகி விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும், சாட்சியங்களை கலைக்க முயற்சி செய்ய கூடாது என்று எடியூரப்பா தாக்கல் செய்திருந்த மனுவில் உயர் நீதிமன்றம் இடைக்கால உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த வழக்கு தொடர்பாக கடந்த ஜூன் 12 ஆம் தேதி சிபிஐ விசாரணைக்கு அழைத்தது. ஆனால், அவர் தான் டெல்லியில் இருப்பதைக் காரணம் காட்டி ஜூன் 18 ஆம் தேதி வரை கால அவகாசம் கோரினார் என்பது குறிப்பிடத்தக்கது.