”சட்டங்கள் கடுமையாக தான் இருக்கிறது.” – மம்தாவுக்கு மத்திய அமைச்சர் பதில்.!
கொல்கத்தா : கொல்கத்தாவில் பெண் பயிற்சி மருத்துவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது. பாலியல் குற்றங்களின் எண்ணிக்கை தற்போதைய சூழலில் அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு பாலியல் குற்றங்களுக்கு எதிரான தண்டனையை கடுமையாக்க வேண்டும் என நாடெங்கிலும் குரல்கள் வலுத்து வருகின்றன.
மேற்கு வங்க மாநில முதலமைச்சர் மம்தா பேனர்ஜி, ஏற்கனவே, கடந்த ஆகஸ்ட் 22ஆம் தேதி மத்திய அரசுக்கு இது தொடர்பாக கடிதம் எழுதியிருந்தார். அதில், பாலியல் குற்றங்களுக்கு எதிரான தண்டனைகளை கடுமையாக்க வேண்டும் என குறிப்பிட்டு இருந்தார். இதற்கு ஆகஸ்ட் 25ஆம் தேதி மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு அமைச்சகம் சார்பில் பதில் கடிதம் கொடுக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து நேற்று மீண்டும் மம்தா பேனர்ஜி மத்திய அரசுக்கு கடிதம் எழுதினார். அதில், ” கடந்த ஆகஸ்ட் 22ஆம் தேதி நான் முதலில் கடிதம் எழுதினேன். அப்போது பாலியல் குற்றங்களுக்கு எதிராக கடுமையான தண்டனைகள் தரும் சட்டங்களை மத்திய அரசு இயற்ற வேண்டும் என கேட்டிருந்தேன். ஆனால், அதற்கு மத்திய அரசு தரப்பில் இருந்து உரிய பதில் கிடைக்கவில்லை.
தேசிய மகளிர் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு அமைச்சகத்தில் இருந்து மட்டும் கடிதம் கடந்த ஆகஸ்ட் 25ஆம் தேதி வந்தது. அந்த கடிதத்தில், பாலியல் குற்றங்கள் குறித்த பிரச்சனையின் தீவிரத்தன்மை பற்றி அந்த பதில் கடிதத்தில் குறிப்பிடப்படவில்லை. பாலியல் குற்றங்களுக்கு எதிராக கடுமையான தண்டனைகள் வழங்க வேண்டும் என்ற எங்கள் கோரிக்கைக்கு அதில் எந்தவிதமான உரிய பதில்களும் இல்லை.
அதனால், தற்போது மீண்டும் கடிதம் எழுதியுள்ளேன். மாநிலத்தின் செயல்படும் விரைவு நீதிமன்றங்களில், 10 போக்ஸோ விரைவு நீதிமன்றங்கள் செயல்பட மாநில அரசு அனுமதி கொடுத்துள்ளது. மேலும், 88 விரைவு நீதிமன்றங்கள் 62 போக்ஸோ நீதிமன்றங்கள் மாநில அரசின் கட்டுப்பாட்டின் கீழ் கூடுதலாக இயக்கப்பட உள்ளது என பல்வேறு தகவல்கள் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதற்கு மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்புத்துறை அமைச்சர் அன்னபூர்ணா தேவி பதில் அளிக்கையில், ” கடிதத்தில் செய்லபடும் மேற்கு வங்க அரசை நிஜத்திலும் செயல்படுமாறு கேட்டுக்கொள்கிறேன். மேற்கு வங்க முதலமைச்சரின் கடிதத்தில் உள்ள தகவல்கள் தவறானவை. மாநிலத்தில் விரைவு சிறப்பு நீதிமன்றங்கள் (FTSCs) செயல்படுவதில் தாமதம் உள்ளது. அதனை மறைக்க தான் இந்த கடிதங்கள் எழுதப்படுகிறது.
குறிப்பாக பாலியல் வன்கொடுமை மற்றும் போக்ஸோ வழக்குகளை கையாள மாநில அரசு கூடுதலாக 11 விரைவு சிறப்பு நீதிமன்றங்களை (FTSC) செயல்படுத்துவாக கூறுவது உண்மையல்ல. எனவே, விரைவு நீதிமன்றங்களின் கூடுதல் பொறுப்பை எந்த நிரந்தர நீதித்துறை அதிகாரிகளுக்கும் வழங்க முடியாது. இந்த விளக்கங்கள் மேற்கு வங்க அரசுக்கு முன்பே தெளிவுபடுத்தப்பட்டுவிட்டது
போதிய அளவு நீதித்துறையில் பணியாளர்கள் இல்லாத காரணத்தால், விரைவு நீதிமன்ற திட்டத்தின் கீழ் ஒப்பந்த அடிப்படையிலேயே நீதித்துறை அதிகாரிகளை ஈடுபடுத்த முடியும். பெண்களுக்கு எதிரான வன்முறைகள் மற்றும் பாலியல் குற்றங்களுக்கு எதிராக தற்போது இருக்கும் சட்டங்கள் விரிவாகவும், கடுமையானதாகவும் உள்ளது. மாநில அரசு, இந்திய தண்டனை சட்டங்களை உயிர்ப்புடன் விரைவாக பின்பற்றினாலே பெண்களுக்கு எதிரான குற்றங்களை கட்டுப்படுத்த முடியும் என்றும் அமைச்சர் அன்னபூர்ணா தேவி கூறினார்.