இந்தியாவில் தொடர்ந்து அதிகரிக்கும் பாலியல் குற்றங்கள்… தீர்வு தான் என்ன.?
டெல்லி : கொல்கத்தா பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை அடுத்து இந்தியா முழுக்க பல்வேறு பகுதிகளில் எல்.கே.ஜி குழந்தை முதல், 17 வயது சிறுமி வரை பெண் பிள்ளைகளுக்கு எதிராக பல்வேறு பாலியல் குற்றங்கள் நிகழ்ந்துள்ளன.
கொல்கத்தா பாலியல் வழக்கு :
கடந்த ஆகஸ்ட் 9ஆம் தேதி கொல்கத்தா ஆர்.ஜி.கர் மருத்துவமனைக் கல்லூரி வளாகத்தினுள்ளேயே பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கியது. பல்வேறு மாநிலங்களில் மருத்துவர்கள் மட்டுமின்றி பொதுமக்களும் போராட்டத்தில் இறங்கினர். இந்த பாலியல் வன்கொடுமை வழக்கில் தன்னார்வலர் சஞ்சய் ராவ் மட்டுமே கைது செய்யப்பட்டு சிபிஐ விசாரணை வளையத்தில் இருக்கிறார். மேற்கொண்டு முன்னாள் கல்லூரி முதல்வர் சந்தீப் கோஷிடம் சிபிஐ தரப்பினர் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.
மகாராஷ்டிரா எல்.கே.ஜி சிறுமி பாலியல் வழக்கு :
பத்லாபூர் பகுதியில் செயல்பட்டு தனியார்ப் பள்ளியில் பயிலும் 2 எல்.கே.ஜி குழந்தைகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகினர். இந்த கொடுமையை , அதே பள்ளியில் துப்புரவு பணியாளராக பணியாற்றிய அக்ஷய் ஷிண்டே எனும் நபர் செய்துள்ளார். எல்கேஜி குழந்தைக்கு எதிரான பாலியல் குற்றம் அப்பகுதி மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
இச்சம்பவத்தை அடுத்து பள்ளிக்கூடம் முன் போராட்டம், ரயில் மறியல் , காவல்துறை தடியடி என பத்லாபூர் பகுதி முழுவதும் போர்க்களம் போலக் காட்சியளித்தது. குற்றம் சாட்டப்பட்ட அக்ஷய் ஷிண்டே தற்போது காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். பள்ளி முதல்வர் , வகுப்பு ஆசிரியர் மற்றும் குழந்தை பராமரிப்பாளர் ஆகியோர் பள்ளியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
மகாராஷ்டிரா பள்ளி சிறுமி பாலியல் வழக்கு :
மகாராஷ்டிரா மாநிலம் புனே, பிம்ப்ரி சின்ச்வாட் காவல்துறை எல்லைக்கு உட்படத் தனியார்ப் பள்ளியில் 12 வயது பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார். பெற்றோர்கள் அளித்த புகாரின் பெயரில், உடற்கல்வி ஆசிரியர், பள்ளி முதல்வர், பள்ளி தாளாளர் உட்பட 7 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். ‘
முக்கிய குற்றவாளியாகப் பார்க்கப்படும் உடற்கல்வி ஆசிரியர் மீது ஏற்கனவே போக்ஸோ வழக்குப் பதியப்பட்டு தண்டனை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மகாராஷ்டிரா கூட்டுப் பாலியல் வன்கொடுமை :
பால்கர் மாவட்டத்தில் உள்ள நலசோபராஎனும் பகுதியில் 17 வயது சிறுமி நடைப்பயிற்சி மேற்கொண்டுள்ளார். அப்போது, சோனு எனும் நபர், சிறுமியிடம் பேசி நலசோபராவில் உள்ள ஒரு ஒதுக்குப்புறமான இடத்திற்கு அழைத்துச் சென்று தனது நண்பருடன் சேர்ந்து சிறுமியை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
இந்த சம்பவத்தைச் சிறுமி தன் வீட்டில் பெற்றோரிடம் கூறியுள்ளார். பெற்றோர் அளித்த புகாரின் பெயரில், குற்றம் சாட்டப்பட்ட இருவரும் கைது செய்யப்பட்டு, அவர்கள் மீது போக்சோ பிரிவில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக லின்ஜ் பகுதி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
அசாம் சிறுமி பாலியல் வழக்கு :
கடந்த வியாழன் அன்று அசாம் மாநிலம் நாகோன் மாவட்டத்தில் திங் எனும் பகுதியில் பள்ளி முடிந்து 14 வயது சிறுமி வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது 3 பேர் கொண்ட கும்பல் அந்த சிறுமியைக் கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
இந்த குற்றச்சம்பவத்தில், வெள்ளிக்கிழமை தஃபுஜல் இஸ்லாம் என்ற நபர் மட்டும் கைது செய்யப்பட்டு இருந்தார். அவரை இன்று அதிகாலை 4 மணியளவில் குற்றம் நடந்த இடத்திற்கு மறுப்பதிவாக்கம் செய்ய காவல்துறையினர் அழைத்துச் சென்றுள்ளனர். அப்போது காவல்துறையினரைத் தாக்கி தஃபூஜல் தப்பிக்க முயன்றுள்ளார். அப்போது அருகில் உள்ள குளத்தில் விழுந்துள்ளார். இதில் நீரில் மூழ்கி தஃபுஜால் உயிரிழந்தார். 2 மணி நேரமாக மீட்புப்படையினர் தேடி பின்னர் தஃபுஜல் உடலை மீட்டனர். இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் 2 பேர் தலைமறைவாக உள்ளனர். அவர்களைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
கிருஷ்ணகிரி பாலியல் வழக்கு :
மேற்கண்ட பாலியல் வழக்குகளைப் போல் தமிழகத்திலும் பாலியல் வழக்கு பதிவாகி தமிழக மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் போலி என்சிசி முகாம் நடத்தி பள்ளி சிறுமியை சிவராமன் என்பவர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார் என சிவராமன் கைது செய்யப்பட்டார். அதே நேரம், இந்த சம்பவத்தை மறைக்க முயன்றதாகப் பள்ளி தலைமை ஆசிரியர் , தாளாளர், ஆசிரியர்கள் உட்பட மொத்தம் 11 பேர் இந்த வழக்கில் கைதாகினர்.
ஆனால், சிவராமன் கைது செய்யப்படுவதற்கு முன்னரே விஷம் அருந்தியதாகவும் , சேலம் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை உயிரிழந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், சிவராமன் தந்தை நேற்று முன்தினம் சாலையில் தவறி விழுந்து உயிரிழந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. பாலியல் வழக்கில் முக்கிய குற்றவாளியான சிவராமன் மற்றும் அவரது தந்தையின் உயிரிழப்புகள் அரசியல் வட்டாரத்தில் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
தந்தையால் பாலியல் வன்கொடுமை :
சென்னை புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்த 6 வயது சிறுமி நேற்று முன்தினம் சென்னை எழும்பூர் அரசு மருத்துவமனையில் உடல்நல குறைவால் அனுமதிக்கப்பட்டார். அச்சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள், சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் நடந்ததை உறுதி செய்துள்ளனர். இதனை அடுத்து, மருத்துவர்கள் அளித்த புகாரின் பெயரில் புளியந்தோப்பு மகளிர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், சிறுமியின் தந்தை ரவி என்பவர் (புதிய பாரதம் கட்சி பிரமுகர்) தான் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்தது தெரியவந்தது. இதனை அடுத்து ரவியை போக்ஸோ பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தீர்வு தான் என்ன.?
தாமதிக்கப்பட்ட நீதியும், மறுக்கப்பட்ட நீதியும் ஒன்றே என்ற கூற்றுக்கு ஏற்ப தான் நமது நாட்டில் குற்றங்களுக்கு சட்டரீதியாகத் தண்டனைகள் வழங்கப்பட்டு வருகிறது. நாட்டையே உலுக்கிய டெல்லி நிர்பயா வழக்கில் குற்றவாளிகள் 6 பேரில் 4 பேருக்கு 7 ஆண்டுகள் கழித்துத் தான் தூக்குத் தண்டனை நிறைவேற்றம் செய்யப்பட்டது. அதில் ஒருவர் வழக்கு விசாரணைக் காலத்தில் உயிரிழந்தார். மற்றொருவர் சம்பவத்தன்று 17 வயது என்பதால் சிறார் சிறையில் 3 ஆண்டுகள் தண்டனை அனுபவித்து விடுதலையானார்.
மற்றபடி உடனடி தீர்வு என்று மக்கள் மத்தியில் பார்க்கப்படுவது காவல்துறை என்கவுண்டர் மட்டுமே. முன்னதாக ஹைதராபாத்தில் பெண் மருத்துவர் கொலை செய்யப்பட்டு எரிக்கப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் காவல்துறை என்கவுண்டரால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
பாலியல் குற்றங்களை மற்ற குற்றங்கள் போலக் கருதாமல், விசாரணையை விரைந்து முடித்து, குற்றவாளிகளுக்குக் கடுமையான தண்டனைகளை உடனடியாக வழங்கினால் மட்டுமே பாலியல் குற்றங்கள் குறையும். இதுவே தற்போது வரையில் கொல்கத்தாவில் போராடி வரும் மருத்துவர்கள் மற்றும் பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.