மகாராஷ்டிராவில் 5 மாடி குடியிருப்பு கட்டிடம் இடிந்து விபத்து – 7 பேர் உயிரிழப்பு!
மகாராஷ்டிர மாநிலத்திலுள்ள தானே மாவட்டத்தில் 5 அடுக்கு மாடி குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்ததில் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.
மகாராஷ்டிர மாநிலத்திலுள்ள தானே மாவட்டத்தில் உள்ள நேரு சவுக் என்ற இடத்தில் அமைந்துள்ள ஐந்து அடுக்குகள் கொண்ட குடியிருப்பு கட்டடத்தின் ஒரு பகுதியான ஐந்தாவது தளத்திலிருந்து அடுக்குமாடி முழுவதுமாக இடிந்து விழ தொடங்கியுள்ளது. இந்த சம்பவத்தின் போது வீடுகளுக்குள் இருந்த பலர் இடிபாடுகளில் சிக்கியுள்ளனர். இதனையடுத்து உடனடியாக தேசிய பேரிடர் மீட்பு படையினர் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.
இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர். மீட்கப்பட்டவர்கள் அனைவரும் அவ்வப்போது மருத்துவமனைகளுக்கு அனுப்பப்பட்ட நிலையில், இதுவரை 7 பேர் உயிரிழந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மொத்தமாக அந்த அடுக்குமாடி குடியிருப்புகளில் எத்தனை பேர் இருந்தார்கள் என்று முழுமையான விவரம் இன்னும் வெளிவரவில்லை. இருப்பினும், உயிரிழந்த 7 பேரை தவிர இன்னும் நான்கு பேர் உள்ளே இருக்கலாம் எனவும் அஞ்சப்படுகிறது. இதே போல அந்த பகுதியில் கடந்த 15ஆம் தேதி ஒரு குடியிருப்பு கட்டடம் இடிந்து விழுந்த சம்பவத்தில் 5 பேர் உயிரிழந்ததும் குறிப்பிடத்தக்கது.