பிரதமர் மோடியை புகழ்ந்த உச்ச நீதிமன்றத்தின் மூத்த நீதிபதி.!
- பிரதமர் மோடி பன்முகத் திறமை கொண்ட அறிவாளி, சர்வதேச அங்கீகாரம் பெற்ற தொலைநோக்கு சிந்தனையாளர் என உச்சநீதிமன்ற நீதிபதி அருண் மிஸ்ரா புகழ்ந்துள்ளார்.
டெல்லியில் நீதித்துறையும் மாறிவரும் உலகமும் என்ற தலைப்பில் 2020-ம் ஆண்டுக்கான சர்வதேச நீதித்துறை மாநாடு உச்ச நீதிமன்ற வளாகத்தில் நேற்று நடைபெற்றது. இந்த மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இதில் மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் மற்றும் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே உட்பட 20-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த நீதிபதிகள் பலரும் இம்மாநாட்டில் கலந்துகொண்டனர். இதையடுத்து மாநாட்டின் நன்றி உரையில் பேசிய உச்சநீதிமன்றத்தின் மூத்த நீதிபதி அருண் மிஸ்ரா, உலக அளவில் சந்தித்து உள்நாட்டில் செயல்படும் பல்துறை வித்தகர் நரேந்திர மோடி அவர்களின் உரைக்கு எங்களுடைய நன்றியைத் தெரிவிக்கிறோம் என்று கூறினார்.
இதையடுத்து பேசிய அவர், இந்தியா மிகப்பெரிய ஜனநாயக நாடு என்றும் உலக மக்கள் அனைவரும் நம் நாடு எப்படி இயங்குகிறது என்பதை பார்த்து ஆச்சரியப்படுகிறார்கள். சர்வதேச அளவில் தொலைநோக்கு பார்வை கொண்ட பிரதமர் மோடியின் ஆட்சியில் இந்தியா பொறுப்புணர்வு மற்றும் நட்புமிக்க நாடாகவும் விளங்குகிறது. அரசியலமைப்புகளுக்கு உட்பட்டு அமைதியான, பாதுகாப்பான மற்றும் பயங்கரவாதம் இல்லாத ஒரு நாடாக இந்தியா விளங்குகிறது.
மேலும் காலாவதியாகிப் போன 1500 சட்டங்களை நீக்கியதை சுட்டிக்காட்டி, பிரதமர் மோடியையும், சட்டத்துறை அமைச்சரையும் அவர் புகழ்ந்துரைத்தார். பிரதமர் மோடியின் தலைமையில் சர்வதேச சமூகத்திற்கு நல்ல உறவாக இந்தியா திகழ்வதாக கூறினார். மேலும் பன்முகத் திறமை கொண்ட அறிவாளியும், உலக தரத்தில் சிந்தித்து, உள்நாட்டிற்காக பாடுபடும் தலைவருமான பிரதமர் மோடியின் பேச்சு, கருத்தரங்கிற்கு ஊக்கம் அளிக்கும் வகையில் இருந்ததாக அருண் மிஸ்ரா குறிப்பிட்டார்.