காங்.மூத்த தலைவர் மற்றும் முன்னாள் ஆளுநர் மறைவு – முதல்வர் இரங்கல்!
காங்கிரஸ் மூத்த தலைவரும்,மகாராஷ்டிரா, நாகாலாந்து ஆகிய மாநிலங்களின் முன்னாள் ஆளுநருமான கே.சங்கரநாராயணன் அவர்கள்,கேரளாவின் பாலக்காட்டில் உள்ள அவரது இல்லத்தில் ஞாயிற்றுக்கிழமை காலமானார்.அவருக்கு வயது 89.
கடந்த ஒன்றரை வருடமாக பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று அவர் காலமானார்.அவரது உடல் அவரது இல்லத்திலும், காங்கிரஸ் கட்சி அலுவலகத்திலும் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு,இன்று மாலை 5.30 மணிக்கு தகனம் செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனையடுத்து,கே.சங்கரநாராயணன் அவர்களின் மறைவுக்கு கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான்,கேரள முதல்வர் பினராயி விஜயன் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள்,பிரமுகர்கள் மற்றும் மக்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
“காங்கிரஸ் தலைவராகவும்,அமைச்சராகவும்,ஆளுநராகவும் இருந்த சங்கரநாராயணனின் வாழ்க்கை வளமான நிர்வாக அனுபவம் மற்றும் உறுதியான சமூக ஈடுபாடு ஆகியவற்றால் குறிக்கப்பட்டது.அவரது மறைவு கேரளாவுக்கு இழப்பு.அவரது ஆன்மா முக்தி அடையட்டும்” என்று கேரள கவர்னர் கான் ட்வீட் செய்துள்ளார்.
இந்நிலையில்,காங்கிரஸ் கட்சியின் நேருவியக் கண்ணோட்டத்தை சங்கரநாராயணன் நிலைநிறுத்தினார் என்று முதல்வர் விஜயன் தனது இரங்கல் செய்தியில் கூறியுள்ளார்.இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் கூறியிருப்பதாவது:
“மூத்த காங்கிரஸ் தலைவர் கே.சங்கரநாராயணனின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.அவர் நேருவிய மற்றும் மதச்சார்பற்ற கண்ணோட்டத்தை நிலைநாட்டினார்.அவர் மக்கள் சார்ந்த அரசியல்வாதி.ஆளுநராகவும், அமைச்சராகவும், சட்டமன்ற உறுப்பினராகவும் மக்கள் நட்புறவு நடவடிக்கைகளை மேற்கொண்டு வளர்ச்சிக்காக நின்றவர்”,என்று பதிவிட்டுள்ளார்.
Express heartfelt condolences on the passing of senior Congress leader K. Sankaranarayanan. He upheld a Nehruvian and secular outlook. He was a people oriented politician. As governor, minister and legislator he undertook people friendly measures, and stood for development. pic.twitter.com/fydsc0ZwJw
— Pinarayi Vijayan (@vijayanpinarayi) April 24, 2022
காங்கிரஸ் தலைவர் கே.சங்கரநாராயணன் அவர்கள்,தனது பல தசாப்த கால ஆட்சிக் காலத்தில் பல்வேறு மாநிலங்களின் ஆளுநராகப் பணியாற்றியவர்.குறிப்பாக,மகாராஷ்டிரா, நாகாலாந்து மற்றும் ஜார்கண்ட் மாநிலங்களின் ஆளுநராகப் பணியாற்றியவர்.மேலும் அருணாச்சல பிரதேசம், அசாம் மற்றும் கோவா ஆகிய மாநிலங்களின் ஆளுநராக கூடுதல் பொறுப்புகளை வகித்துள்ளார்.
அதே சமயம்,மறைந்த சங்கரநாராயணன் அவர்கள் நான்கு முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்தார் மற்றும் கேரளாவில் பல்வேறு அரசாங்கங்களில் நிதி, கலால் மற்றும் விவசாய இலாகாக்களை வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.