இன்று முதல் இந்த மாநிலத்தில் ஆன்லைன் மூலம் மது விற்பனை.!
ஒடிசா மாநிலத்தில் இன்று முதல் ஆன்லைன் மூலம் மதுவிற்பனை நடைமுறைக்கு வருகிறது.
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நாடு முழுவதும் மார்ச் 24 ஆம் தேதி முதல் 4 கட்டங்களாக தற்போது மே 31 வரை ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த ஊரடங்கில் பெரும்பாலும் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. அந்த தளர்வுகளின் அடிப்படையில் தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் மதுபான கடைகள் திறக்கப்பட்டன. சுமார் 40 நாட்களுக்கு பிறகு மதுக்கடைகள் திறக்கப்பட்டதால் மதுபிரியர்களின் கூட்டம் அலைமோதியது. இதனால் சமூக விலகல் கேள்விக்குறியானது.
இதையடுத்து, உச்ச நீதிமன்றம் மதுபானங்களை ஆன்லைனில் மூல விற்பனை செய்ய ஏற்பாடுகளை மாநில அரசுகள் செய்யுமாறு வலியுறுத்தப்பட்டது. அதன்படி, சத்தீஸ்கர், மேற்கு வங்கம், பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் மதுபானங்களை ஆன்லைன் மூலம் விற்பனை செய்யும் நடைமுறையை அமல்படுத்தியது. இந்த நடைமுறையை நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்கள் கொண்டுவரப்போவதாக தகவல் வெளியானது. இதனைத்தொடர்ந்து, ஜார்கண்ட் அரசு ஸ்விகியுடன் ஒப்பந்தம் செய்துள்ளது.
இதனால் ராஞ்சி நகரத்தில் நேற்று முன்தினம் முதல் தங்கள் மதுபான ஹாம் டெலிவரியை ஸ்விகி நிறுவனம் தொடங்கியது. இப்போது ஒடிசா அரசே ஒரு இணையதளத்தை உருவாக்கி அதன்மூலம் மதுவிற்பனையை நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளது. அதன்படி, மதுபிரியர்கள் https://osbc.co.in/ என்ற இணையதளத்துக்கு சென்று மதுவகையை தேர்தெடுத்து ஆன்லைனில் பணம் செலுத்தினால் தாங்கள் விரும்பும் மதுபானம் வீடு தேடி வரும் அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. இந்த நடைமுறை இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.