குஜராத்தில் சுற்றுலா தளங்களில் செல்பி எடுக்க தடை – மீறினால் நடவடிக்கை!
குஜராத்திலுள்ள டாங் மாவட்டத்தில் சுற்றுலா பயணிகள் செல்பி எடுப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
குஜராத்தில் உள்ள டாங் மாவட்டத்தில் உள்ள மலைப் பகுதியான சபுடரா பகுதிக்கு அதிக அளவில் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்வது வழக்கம். இந்நிலையில் சுற்றுலாவிற்கு வரக்கூடிய பயணிகள் அங்குள்ள இயற்கையை ரசிக்கும் பொழுது அங்குள்ள விலங்குகள் மற்றும் பூங்காக்களுக்கு அருகில் நின்று அதிக அளவில் செல்பி எடுப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இவ்வாறு செல்பி எடுப்பது அபாயகரமானதாக இருக்கும் என்பதால் மாவட்ட நிர்வாகம் இனிமேல் சுற்றுலா பயணிகள் செல்பி எடுக்க கூடாது என தடை விதித்துள்ளது.
இது குறித்து மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பொறுப்பற்ற நிலையில் இருக்கக்கூடிய சில சுற்றுலா பயணிகள் இவ்வாறு செல்பி எடுப்பதன் மூலம் ஆபத்துகள் ஏற்படும் எனவும், எனவே இதுபோன்ற சம்பவங்களை தவிர்ப்பதற்காகத்தான் செல்பி எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும் இந்த உத்தரவை மீறி செல்பி எடுக்கக்கூடிய நபர்கள் மீது போலீஸ் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. விபத்துகளை தடுப்பதற்காகத்தான் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.