ஊரடங்கின் போது நடத்தப்பட்ட ரகசிய திருமணங்கள் சட்டவிரோதமானது – மத்திய பிரதேசம்!
மே மாதம் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு, திருமணங்கள் நடத்த தடை விதிக்கப்பட்ட நிலையிலும், தடையை மீறி நடந்த திருமணங்கள் சட்டவிரோதமானது என மத்தியபிரதேசத்தில் கூறப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்குநாள் தனது தீவிரத்தை அதிகரித்துக் கொண்டே தான் செல்கிறது. இதனை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் நாடு முழுவதும் உள்ள பல்வேறு மாநிலங்களில் உள்ள தொற்று பரவலின் அடிப்படையில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மத்தியபிரதேச மாநிலத்திலும் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகளவில் காணப்படுவதால் இந்த மே மாதத்தில் ஊரடங்கு கடுமையாக விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த ஊரடங்கு நேரத்தில் திருமணங்கள் நடத்தக்கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் கட்டுப்பாடுகளை மீறி மே மாதத்தில் ரகசியமாக சில திருமணங்கள் நடத்தப்பட்டதாகவும், இவ்வாறு நடத்தப்பட்ட திருமணங்கள் சட்டவிரோதமாக அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அம்மாநிலத்தை சேர்ந்த உள்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். மேலும் இவ்வாறு திருமணம் செய்து கொண்ட தம்பதிகளுக்கு திருமண சான்றிதழ் வழங்கப்பட மாட்டாது எனவும் கூறப்பட்டுள்ளது.
இந்த திருமணங்கள் சட்டவிரோதமானது என அறிவிக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் மத்திய பிரதேசத்தில் மே மாத ஊரடங்கின் போது திருமணம் நடத்தக் கூடாது என தடை விதிக்கப்பட்ட நிலையில் சிலர் ரகசியமாக திருமணம் செய்து கொண்டாலும், பலர் அண்டை மாநிலங்களுக்கு திருமணங்களை மாற்றி வைத்து நடத்தியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.