அதானி குழுமம் மீதான குற்றசாட்டு! விசாரணையை தொடங்கியது செபி!
அதானி குழுமம் மீது அமெரிக்க வழக்கறிஞர்கள் கூறிய குற்றசாட்டு குறித்து உண்மை கண்டறியும் விசாரணையை செபி அமைப்பு தொடங்கியுள்ளது.
டெல்லி : அதானி குழுமத் தலைவர் கெளதம் அதானி மீது அமெரிக்க வழக்கறிஞர்கள் நியூயார்க் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். அதில், அதானி கிரீன் எனர்ஜி நிறுவனம், பல்வேறு ஒப்பந்தங்களை செயல்படுத்துவதற்கு இந்திய அரசு அதிகாரிகளுக்கு சுமார் 250 மில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு லஞ்சம் கொடுத்ததாகவும், இதனை அடுத்து அந்நிறுவனம் சர்வதேச முதலீடுகளை ஈர்க்க முயற்சிப்பதாகவும் குற்றம்சாட்டி இருந்தது.
இந்த குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்த அதானி குழுமம், அமெரிக்காவில் முதலீடு கோரும் கடன் பத்திர வெளியீடு திட்டத்தை தற்காலிகமாக தள்ளி வைத்தது. இந்த குற்றசாட்டு அடிப்படை ஆதாரமற்றது. இதனை நாங்கள் சட்ட ரீதியாக எதிர்கொள்வோம் என்றும் அதானி குழுமம் தெரிவித்தது.
இதனை அடுத்து, இந்திய பங்குச்சந்தையை நிர்வகிக்கும் செபி அமைப்பு அதானி குழுமம் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டின் உண்மை தன்மை ஆராயும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இந்த விசாரணை 2 வாரங்கள் நீடிக்கும் எனவும், குற்றசாட்டு உண்மையாகும் பட்சத்தில், அதானி குழுமம் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
இந்த விசாரணை குறித்து தங்களுக்கு தெரியாது என்றும், குற்றசாட்டு குறித்து விசாரணை எங்கள் மீது நடத்தப்பட்டால் சட்டதிட்டங்களுக்கு கட்டுப்பட்டு விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிப்போம் என அதானி குழுமம் கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.