மகாராஷ்டிரா: அக்டோபர் 4 முதல் பள்ளிகள் திறப்பு..!
அக்டோபர் 4 முதல் மகாராஷ்டிராவில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அக்டோபர் 4 முதல் மகாராஷ்டிரா முழுவதும் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என்று மாநில அரசு இன்று தெரிவித்துள்ளது. கிராமப்புறங்களில் உள்ள அனைத்துப் பள்ளிகளும் 5 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான நேரடி வகுப்புகளை மீண்டும் தொடங்கவுள்ளதாக அம்மாநில பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் வர்ஷா கெய்க்வாட் கூறியுள்ளார்.
மேலும், 8 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான நேரடி வகுப்புகள் நகர்ப்புறங்களில் மீண்டும் தொடங்கவுள்ளதாகவும் தகவல் தெரிவித்துள்ளார். இதனையடுத்து நகர்ப்புறங்களில் 1 முதல் 7 வரை மற்றும் கிராமப்புறங்களில் 1 முதல் 4 வரை உள்ள வகுப்புகளுக்கு பள்ளிகள் இப்போது தொடங்காது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாநிலம் முழுவதும் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என்றாலும், மாணவர்கள் நேரடி வகுப்புகளில் கலந்து கொள்ள வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. அவர்கள் கலந்து கொள்ள விரும்பினால் பெற்றோரின் ஒப்புதல் அவசியம் என்று அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.
பள்ளிக் கல்வித் துறையால் நடத்தப்பட்ட கணக்கெடுப்பின்படி, 70 சதவீதத்திற்கும் அதிகமான பெற்றோர்கள் பள்ளிகளை மீண்டும் திறக்க விரும்புவதாக கெய்க்வாட் கூறியுள்ளார்.