நீட் முறைகேடு.! மத்திய அரசு பதில் அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு.!
டெல்லி: நீட் முறைகேடு விவகாரம் தொடர்பாக மத்திய அரசு மற்றும் தேசிய தேர்வு முகமை (NTA) ஆகியவை பதில் அளிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
கடந்த மே 5ஆம் தேதி இந்தியா முழுக்க நீட் தேர்வு நடைபெற்றது. அப்போது ராஜஸ்தானில் ஒரு தேர்வு மையத்தில் சில மாணவர்களுக்கு முன்னரே நீட் வினாத்தாள் கிடைக்கப்பெற்றதாகவும், அதனை சமூக வலைத்தளங்களில் சிலர் வெளியிட்டதாகவும் தகவல்கள் வெளியாகின. மேலும், 1500க்கும் மேற்பட்டோருக்கு கருணை மதிப்பெண்கள் வழங்கியது. 67 பேர் 720க்கு 720 என முழு மதிப்பெண் பெற்றது என பல்வேறு குளறுபடிகள் எழுந்தன.
இவ்வாறான நீட் தேர்வு குளறுபடிகள் குறித்து ராஜஸ்தான், குஜராத், மேற்கு வங்கம், பீகார் என பல்வேறு மாநிலங்களில் உள்ள நீதிமன்றங்களில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்குகளை பொதுவாக உச்சநீதிமன்றம் விசாரிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கும், சுமார் 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் தொடர்ந்த வழக்கும் உச்சநீதிமன்றத்தில் பதியப்பட்டு இருந்தது. இவ்வாறாக 8 வழக்குகள் மீதான விசாரணை ஒரேகட்டமான நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் எஸ்விஎன் பட்டி ஆகியோர் அடங்கிய அமர்வின் முன்னர் விசாரணைக்கு வந்தது.
இந்த விசாரணையில், நீட் தேர்வில் முறைகேடு தொடர்பாக, தேசிய தேர்வு முகமை (NTA) மற்றும் மத்திய அரசு உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டு இந்த வழக்கை ஜூலை 8ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.