பயிற்சி மருத்துவரின் பெயர், புகைப்படங்கள் எப்படி கசிந்தது.? உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி.!
டெல்லி : கொல்கத்தா பெண் பயிற்சி மருத்துவர் படுகொலை தொடர்பான வழக்கின் விசாரணை அறிக்கையை வரும் வியாழன் அன்று தாக்கல் செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நாட்டையே உலுக்கிய கொல்கத்தா பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை படுகொலை வழக்கை தற்போது சிபிஐ விசாரணை செய்து வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு இவ்வழக்கு விசாரணையை மேற்கொண்டு வருகிறது.
இன்று காலை தொடங்கிய வழக்கு விசாரணையில் தலைமை நீதிபதி அமர்வு பல்வேறு கேள்விகளை எழுப்பியது. நீதிபதிகள் குறிப்பிடுகையில், ” இந்த வழக்கு கொல்கத்தா மருத்துவர் சம்பந்தப்பட்டது அல்ல. நாடு முழுவதும் உள்ள மருத்துவர்களின் பாதுகாப்பு பிரச்சினைகளைப் பற்றியது. நாங்கள் மருத்துவர்களின் பாதுகாப்பு பற்றிக் கவலைப்படுகிறோம்.
பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயர், புகைப்படம் மற்றும் வீடியோ காட்சிகள் எல்லாம் எப்படி வெளியானது.? பாதிக்கப்பட்டவர்களின் பெயர்களை வெளியிடச் சட்டம் தடை விதித்துள்ளது. அப்படி இருந்தும் பெண் மருத்துவர் பற்றிய விவரங்களை எப்படி வெளியானது.?
அதிகாலையில் குற்றம் கண்டுபிடிக்கப்பட்டதாகக் கூட காவல்துறை முதல் தகவலறிக்கையில் பதிவு செய்யப்படவில்லை.” என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். இதற்கு மறுப்பு தெரிவித்த மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், ” இயற்கைக்கு மாறான மரணம் என காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.” எனக் கூறினார்.
வழக்கு விசாரணையில் நீதிபதிகள் மேலும் கூறுகையில், “மருத்துவமனையில் இப்படியான கடுமையான குற்றம் எப்படி நடந்தது.? மருத்துவமனை நிர்வாகம் என்ன செய்கிறார்கள்.? நாசக்காரர்களை மருத்துவமனைக்குள் நுழைய அனுமதிப்பது யார்.?
பயிற்சி பெண் மருத்துவர் கொலை வழக்கில் சி.பி.ஐ இதுவரை மேற்கொண்ட விசாரணை குறித்து ஒரு நிலையான அறிக்கையை வரும் வியாழன் அன்று சிபிஐ தரப்பு தாக்கல் செய்து விசாரணையின் நிலை குறித்துத் தெரிவிக்க வேண்டும்.
நாடு முழுவதும் உள்ள மருத்துவர்களின் நலன் கருதி, மத்திய அரசு ஒரு தேசிய பணிக்குழுவை அமைக்க வேண்டும். அந்த பணிக்குழு மருத்துவர்களின் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து நாடு முழுவதும் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து பரிந்துரைகளை வழங்க வேண்டும்.
பயிற்சி மருத்துவர் படுகொலைக்குக் கண்டனம் தெரிவித்துப் போராடும் போராட்டக்காரர்கள் மீது மேற்கு வங்க மாநில அரசு, தங்கள் ஆட்சி அதிகாரத்தைக் கட்டவிழ்த்து விடக்கூடாது. “என உச்ச நீதிமன்ற நீதிபதி அமர்வு இன்று விசாரணை அறிக்கையில் தெரிவித்துள்ளது.