“இந்தியாவை காப்பாற்றுங்கள்”.! அநீதிக்கு எதிராக போராடாதவர்கள் கோழைகள்.! ப்ரியங்கா ஆவேசம்.!
- டெல்லி ராம்லீலா திடலில் இன்று ராகுல் காந்தி தலைமையில் “இந்தியாவை காப்பாற்றுங்கள்” என்ற பெயரில் மிக பிரமாண்டமான எதிர்ப்பு பேரணிநடைபெற்றது.
- நாட்டில் நடக்கும் அநீதிக்கு எதிராக போராடாதவர்கள் கோழைகளாக கருதப்படுவார்கள் என பிரியங்கா காந்தி குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவில் நிலவும் பொருளாதார மந்தநிலைக்கு பாஜக அரசின் தவறான கொள்கைகளே காரணம் என்று காங்கிரஸ் தலைவர்கள் குற்றம்சாட்டி வருகிறார்கள். பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள சரிவு காரணமாக தொழில் துறையில் உற்பத்திகள் குறைந்ததால், வேலைவாய்ப்புகளும் குறைந்துள்ளதாக காங்கிரஸ் கூறி வருகிறது.
இந்நிலையில், குடியுரிமை சட்டதிருத்த மசோதா, காஷ்மீரில் 370-வது சட்டப்பிரிவு நீக்கம், விவசாயிகள் பிரச்சினை, வேலைவாய்ப்பு பிரச்சினை போன்றவற்றை கண்டித்து “இந்தியாவை காப்பாற்றுங்கள்” என்ற பெயரில் டெல்லியில் ராம்லீலா திடலில் மிக பிரமாண்டமான எதிர்ப்பு பேரணி ராகுல் காந்தி தலைமையில் நடைபெற்றது. இந்த பேரணியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், பிரியங்கா காந்தி உள்பட காங்கிரஸ் மூத்த தலைவர்கள் இதில் கலந்து கொண்டனர்.
டெல்லி, உத்தர பிரதேசம், பஞ்சாப், அரியானா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான காங்கிரஸ் தொண்டர்கள் இந்த பேரணிக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். இந்த பேரணியில் பங்கேற்று பேசிய பிரியங்கா காந்தி, நாட்டில் நடக்கும் அநீதிக்கு எதிராக போராடாதவர்கள் கோழைகளாக கருதப்படுவார்கள். நாம் அமைதியாக இருந்து விட்டால் புரட்சிகரமான நமது அரசியலமைப்பு சட்டம் அழிக்கப்பட்டு நாட்டில் பிரிவினை தொடங்கி விடும் என ஆவேசத்துடன் தெரிவித்தார்.